search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் தமிழகத்துக்கான மானியம் ரூ.3 ஆயிரத்து 691 கோடியாக அதிகரிப்பு

    ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டம் தொடங்கப்பட்டபோது நாட்டில் உள்ள 19.20 கோடி கிராமப்புற வீடுகளில் 3.23 கோடி வீடுகளிலேயே குழாய் நீர் இணைப்பு இருந்தது.
    புதுடெல்லி:

    ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் 2021-2022-ம் ஆண்டுக்கு தமிழகத்துக்கான மானியம் ரூ.3 ஆயிரத்து 691 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் உள்ள கிராமப்புற வீடுகள் அனைத்துக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குழாய் நீர் இணைப்பை வழங்குவதற்காக ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்கிற திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது நாட்டில் உள்ள 19.20 கோடி கிராமப்புற வீடுகளில் 3.23 கோடி வீடுகளிலேயே குழாய் நீர் இணைப்பு இருந்தது. தற்போது திட்டம் தொடங்கிய 22 மாதங்களில் 4.29 கோடி வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 7.52 கோடியாக அதிகரித்து உள்ளது.

    இதைப்போல தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.26 கோடி கிராமப்புற வீடுகளில் 21.65 லட்சம் வீடுகளில் மட்டுமே திட்டம் தொடங்கியபோது குழாய்நீர் இணைப்பு இருந்தது. தற்போது இந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 40.35 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.

    இந்த நிலையில் இந்த திட்டத்தின் தமிழகத்துக்கான மானியம் கடந்த நிதி ஆண்டைவிட இந்த நிதியாண்டுக்கு கிட்டத்தட்ட 4 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த 2020-2021-ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.921.99 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 2021-2022-ம் நிதியாண்டுக்கு ரூ.3,691.21 கோடியாக மானியம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் இன்னும் 86.33 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய்நீர் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும், 2024-ம் ஆண்டுக்குள் இதை வழங்க வேண்டுமென்றால் பணிகளின் வேகத்தை 179 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய ஜல்சக்தி துறை கூறியுள்ளது. இது தொடர்பாக ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    Next Story
    ×