search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகர்வால்
    X
    அகர்வால்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை: மத்திய அரசு வெளியீடு

    கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும் 2-வது அலையில் குழந்தைகள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சுமார் ஆறுமாத காலம் வரை கொரோனா வைரஸ் பாடாதபாடு படுத்தியது. அதன்பின் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. நவம்பர், டிசம்பர், இந்த வருடம் ஜனவரி மாதங்களில் மக்கள் சகஜமான நிலைக்கு திரும்பி நடமாட ஆரம்பித்தனர்.

    அதன்பின் கொரோனா தொற்றின் 2-வது அலை கூறாவளியாக சுழற்றி அடித்தது. முதல் அலையைவிட 2-வது அலையில் இந்தியா மிகப்பெரிய பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்தது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உச்சநிலையில் இருந்தது.

    இந்த முறை இளைஞர்கள், இணை நோய் அல்லாதவர்கள் என அனைவரும் சிக்கினர். தற்போது 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் 3-வது அலை வரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 3-வது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து நிலவுவதால், ஒவ்வொரு மாநில அரசுகளும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்துள்ளன.

    இந்த நிலையில் இரண்டு அலைகளிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கணக்கை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    மத்திய சுகாதாரத்துறை அமைச்ச இணை செயலாளர் லாவ் அகர்வால் இதுகுறித்து கூறுகையில் ‘‘முதல் அலையில் ஒரு வயதில் இருந்து 10 வயதிற்கு உட்பட்டோர் கொரோனா தொற்றால் 3.28 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டனர். 2-வது அலையில் 3.05 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டனர்.

    11 வயதில் இருந்து 20 வயதிற்கு உட்பட்டோர் முதல் அலையில் 8.03 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் 2-வது அலையில் பாதிப்பு சதவீதம் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் ஏறக்குறைய உச்சத்தில் இருந்த டேட்டாவை விட தற்போது 84 சதவீத தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. 75 நாட்களுக்குப் பிறகு இந்த நிலையை நாம் பார்க்கிறோம்.

    கொரோனா தடுப்பூசி என்பது கூடுதல் ஆயுதம். அனைவரும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளடக்கிய கொரோனா நடத்தைக்கு கட்டுப்பட வேண்டும். முடிந்த அளவிற்கு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்றார்.
    Next Story
    ×