search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் ராவத்
    X
    சஞ்சய் ராவத்

    கூட்டணி கட்சிகளுக்கு முதல்-மந்திரி பதவியை பகிர மாட்டோம்: சஞ்சய் ராவத் திட்டவட்டம்

    ஒருவர் முதல்-மந்திரி பதவிக்கு ஆசைப்படுவதில் எந்த தீங்கும் இல்லை. அனைத்து கட்சிகளிலும் பல்வேறு உரிமை கோரல்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் நாட்டை வழிநடத்தும் திறன் கொண்ட பல தலைவர்கள் உள்ளனர்.
    மும்பை :

    மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பதவிக்கு ஏற்பட்ட போட்டியின் காரணமாக பா.ஜனதா, சிவசேனா இடையே கூட்டணி முறிந்தது.

    இதையடுத்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.

    ஆட்சி அமைத்து 1 ஆண்டு ஆகிவிட்டாலும் இடைஇடையே கூட்டணி கட்சிகளுக்கு இடையே சின்ன, சின்ன மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் எட்டிப்பார்க்காமல் இல்லை.

    எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல எதிர்க்கட்சியான பா.ஜனதாவும் இந்த கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது, நிலையற்ற தன்மை கொண்டது என கூறி வருகிறது.

    இந்தநிலையில் சமீபத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடி இடையேயான தனிப்பட்ட சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு கட்சிகளும் இணைந்து மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இது வழக்கமான சந்திப்பு தான் என சிவசேனா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலேயின் பேச்சு மீண்டும் கூட்டணி கட்சிக்குள் சல சலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நானா படோலே கூறுகையில், 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் என்று கூறினார்.

    இதற்கு பதிலளித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    மகாவிகாஸ் அகாடி ஆட்சியில் சிவசேனாவின் முதல்வர் பதவி 5 ஆண்டுகள் தொடரும். எங்கள் கட்சியை சேர்ந்தவரே அந்த பதவியை வகிப்பார். இது உறுதியான நிலைப்பாடாகும். முதல்-மந்திரி பதவியை பகிர்ந்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை

    காங்கிரஸ் தலைவர் நானா படோலே முதல்-மந்திரியாக ஆசைப்படுவதாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோ வேகமாக பரவி வருகிறது. ஒருவர் முதல்-மந்திரி பதவிக்கு ஆசைப்படுவதில் எந்த தீங்கும் இல்லை. அனைத்து கட்சிகளிலும் பல்வேறு உரிமை கோரல்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் நாட்டை வழிநடத்தும் திறன் கொண்ட பல தலைவர்கள் உள்ளனர்.

    மகா விகாஸ் கூட்டணி கருத்தியல் ரீதியாக வேறுபாடு கொண்ட 3 கட்சிகளின் கூட்டணியாகும்.

    நாங்கள் ஒரு அரசை நடத்துவதற்காக ஒன்றிணைந்தோம். தற்போது அரசியல் அமைப்பால் ஒன்றிணைந்துள்ளோம். இந்த கூட்டணியில் இருக்கும் 3 கட்சிகளும் தங்கள் கட்சியை விரிவுபடுத்துவதற்கும், அமைப்பை பலப்படுத்துவதற்கும் உரிமை உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2024-ம் ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “இது நடக்காது என்று நாங்கள் எப்போது கூறினோம். எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தனது கட்சியின் நிலைப்பாட்டை முன்வைக்கிறார்” என்றார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சந்தித்து பேசினர். இதுகுறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறுகையில், “அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு அரசியல் தலைவர்களை முன்பு சந்தித்து பேசியுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் கூட இணைந்து பணியாற்றியுள்ளார்.

    2024-ல் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சிறந்த போட்டியை அளிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் அதில் என்ன தவறு?” என்றார்.
    Next Story
    ×