search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தொடங்கிய 2-வது நாளிலேயே வருமானவரி புதிய இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக ‘www.incometax.gov.in’ என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதை பிரபலமான ‘இன்போசிஸ்’ உருவாக்கி அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    வருமானவரித்துறை புதிய இணையதளத்தில், தொடங்கப்பட்ட 2-வது நாளிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், நிர்மலா சீதாராமன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் புகார்கள் குவிந்தன.

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக ‘www.incometax.gov.in’ என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதை பிரபலமான ‘இன்போசிஸ்’ உருவாக்கி அளித்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு இந்த இணையதளம் செயல்பட தொடங்கியது.

    இதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அதிகாலையில் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். வரி கணக்கு தாக்கல் செய்வதை வரி செலுத்துவோருக்கு எளிதானவகையில் ஆக்குவதில் முக்கியமான மைல்கல் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

    ஆனால், சற்று நேரத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில் புகார்கள் வந்து குவிந்தன. புதிய இணையதளத்தை திறக்க முடியவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும் பயனாளர்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.

    இதையடுத்து, கோளாறை சரிசெய்யுமாறு ‘இன்போசிஸ்’ நிறுவனத்தை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

    அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘எனது பக்கத்தில் ஏராளமான குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தரமான சேவை அளிப்பதில், வரி செலுத்துவோரை இன்போசிஸ் நிறுவனமும், அதன் தலைவர் நந்தன் நிலேகனியும் கைவிடமாட்டார்கள் என்று நம்புகிறேன். வரி செலுத்துவோருக்கு எளிதான அனுபவம் அளிப்பதுதான் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×