search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேணுகாச்சார்யா
    X
    ரேணுகாச்சார்யா

    எடியூரப்பாவுக்கு 65 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: ரேணுகாச்சார்யா பரபரப்பு பேட்டி

    எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கூறியதால் நான் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கியதாக கூறுவது தவறு. நான் சுயமாக சிந்தித்து, கையெழுத்து இயக்கத்தை நடத்தினேன். எடியூரப்பாவுக்கு எதிராக பேசுவதால் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வயதாகி விட்டதால் அவரை மாற்ற வேண்டும் என்று பா.ஜனதாவில் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் திரைமறைவில் செயல்பட்டு கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக மந்திரி சி.பி.யோகேஷ்வர், பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலர் எடியூரப்பாவை மாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    எடியூரப்பா விரைவில் மாற்றப்படுவார் என்று பசனகவுடா பட்டீல் யத்னால் பகிரங்கமாகவே கூறி வருகிறார்.

    இந்த நிலையில் எடியூரப்பா, பா.ஜனதா மேலிடம் விரும்பினால், பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா மேலிடம் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். சிலரின் நடவடிக்கையால் அவர் இவ்வாறு பேசியுள்ளார். எடியூரப்பாவுக்கு எங்கள் கட்சியில் 65 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அவர்களிடம் கையெழுத்து வாங்கிய கடிதத்தை வைத்துள்ளேன். கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகு அந்த கடிதத்தை எங்கள் கட்சி மேலிடத்திற்கு அனுப்புவேன்.

    எடியூரப்பாவுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். கொரோனா பரவலை எடியூரப்பா சிறப்பான முறையில் செயல்பட்டு தடுத்து வருகிறார். யாரோ ஒரு சிலர் எடியூரப்பாவுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். நாங்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ளோம். அவர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

    சிலரால் தங்களின் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தலைவர்களில் சிலரால் பக்கத்து தொகுதியில் கட்சியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. அத்தகையவர்கள் எடியூரப்பா
    வுக்கு எதிராக பேசுகிறார்கள்.

    எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கூறியதால் நான் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கியதாக கூறுவது தவறு. நான் சுயமாக சிந்தித்து, கையெழுத்து இயக்கத்தை நடத்தினேன். எடியூரப்பாவுக்கு எதிராக பேசுவதால் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளேன்.

    இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.

    இதற்கிடையே முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் அனைவரும்
    எடியூரப்பா
    வுக்கு ஆதரவாக உள்ளோம். அவர் எக்காரணம் கொண்டும் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்.

    நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூரு வரவுள்ளார். அவர் கட்சி தலைவர்கள் அனைவருடனும் பேசுவார்.
    எடியூரப்பா மீது கட்சி மேலிடத்திற்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.
    Next Story
    ×