search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்து காட்டுப்பகுதியில் பதுங்கிய மலைவாழ் மக்கள்

    சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்து சுகாதார துறையினர் வருவது பற்றி அறிந்ததும் மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
    கொள்ளேகால் :

    சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கிராமம், கிராமமாக சென்று 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு உடல் வலி, தலைவலி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.

    அதிலும் கிராம மக்கள்
    கொரோனா தடுப்பூசி
    என்றாலே அலறி அடித்து ஓடுகிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    ஹனூர் தாலுகா பி.ஜி.பாளையா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹாவினமூலே கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 190 பேர் உள்ளனர். இந்த கிராமத்தில் வசித்து வருபவர்கள் அனைவரும் மலைவாழ் மக்கள் ஆவர். அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சுகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 190 பேருக்கும் கொரோனா தடுப்பூசி
    போட சுகாதார துறையினர் சென்றனர். மேலும் அவர்களுடன் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கிருஷ்ணா மற்றும் சில அரசு அதிகாரிகள் சென்றனர்.

    அவர்கள் வருவதற்கு முன்னதாகவே கிராமத்தில் தண்டோரா மூலம் கிராமத்திற்கு சுகாதார துறையினர் வருவதகாவும், அவர்கள் கிராம மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தடுப்பூசி போடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி விடுவார்கள், கொரோனா தடுப்பூசி போட்டு விடுவார்கள் என்று அஞ்சி கிராமத்தில் இருந்து அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு குடும்பத்துடன் சென்று பதுங்கிக் கொண்டனர். இதனால் கிராமத்திற்கு சென்ற சுகாதார துறையினர் உள்பட அனைவரும் மக்கள் நடமாட்டம் இன்றி கிராமம் வெறிச்சோடி கிடந்ததைக் கண்டு அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலையிலும் சுகாதார துறையினரும், கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கிருஷ்ணா மற்றும் அரசு அதிகாரிகளும் சென்றனர். அப்போது அவர்கள் வருவது பற்றி அறிந்த கிராம மக்கள் வீட்டை பூட்டுவிட்டு குடும்பத்துடன் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டனர். இதையடுத்து கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருவாக சென்று சுகாதார துறையினரும், அரசு அதிகாரிகளும் கிராம மக்களை தேடினர். அப்போது அனைத்து வீடுகளும் பூட்டப்பட்டு கிடந்தது. மேலும் கிராம மக்கள் அனைவரும் காட்டுப்பகுதிக்குள் குடும்பத்துடன் பதுங்கி கொண்டது தெரியவந்தது.

    இதுபற்றி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கிருஷ்ணா கூறுகையில், ‘‘மதியம் 12.30 மணி வரை கிராம மக்கள் வீடுகளில் தான் இருந்துள்ளனர். சுகாதார துறையினர் வருவது பற்றி அறிந்ததும் அவர்கள் காட்டுப்பகுதிக்குள் ஓடிவிட்டனர். இந்த கிராமத்தில் இதுவரை ஒருவர் கொரோனாவால் இறந்திருக்கிறார். மேலும் 5 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரிசோதனை செய்து கொள்வதும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதும் நல்லது என்று மக்களிடம் நான் எடுத்துரைத்துள்ளேன். அப்படி இருந்தும் மக்கள் அச்சத்தில் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்’’ என்று கூறினார்.
    Next Story
    ×