search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    மகாவிகாஸ் அகாடி அரசில் பல ‘சூப்பர் முதல்-மந்திரிகள்' உள்ளனர்: தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல்

    அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய அறிவிப்புகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே மந்திரிகள் பலர் முன்கூட்டியே அறிவிப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளனர்.
    மும்பை :

    மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மகாவிகாஸ் கூட்டணி என அழைக்கப்படும் அரசில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக உள்ளார். எனினும் அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய அறிவிப்புகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே மந்திரிகள் பலர் முன்கூட்டியே அறிவிப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளனர்.

    இந்த விகாரத்தில் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் மந்திரிகளை, காங்கிரஸ் கட்சி எச்சரித்து இருந்தது. எனினும் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசின் பல அறிவிப்புகளை மந்திரிகள் முன்கூட்டியே தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் காங்கிரசை சேர்ந்த மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை மந்திரி விஜய் வடேடிவார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த 18 மாவட்டங்களில் அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் மந்திரியின் அறிவிப்பை மறுத்து முதல்-மந்திரி அலுவலகம் தகவல் வெளியிட்டது. அதில் எந்த மாவட்டத்திலும் தளர்வுகள் அளிக்கப்படவில்லை என கூறப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அரசில் ஒரு முதல்-மந்திரியும், பல சூப்பர் முதல்-மந்திரிகளும் உள்ளனர். பல மந்திரிகள் அவர்களை முதல்-மந்திரியாகவே நினைத்து கொள்கின்றனர். அவர்களே அறிவிப்புகளையும் வெளியிடுகின்றனர். எந்த ஒரு அரசிலும் முதல்-மந்திரி தான் கொள்கை முடிவுகளை எடுப்பார். அல்லது முக்கிய பிரச்சினை குறித்து பேச ஒரு மந்திரியை தோ்வு செய்வார். ஆனால் இந்த அரசில், முதல்-மந்திரி அறிக்கை வரும் முன்பே பல மந்திரிகள் வெளியில் பேசுகின்றனர். இது அறிவிப்பை வெளியிட்டு பெயர் பெற வேண்டும் என்ற மனப்பான்மை ஆகும்.

    கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து அறிவிப்பு கூட இந்த முட்டாள் தனத்தால் வெளியானது. இதற்கு முன்பும் இதுபோல நடந்து உள்ளது. அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×