search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய முறையில் பரீட்சை: மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு

    மாணவர்களின் எதிர்காலம், அவர்களின் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கர்நாடகத்தில் 2020-21-ம் ஆண்டிற்கான பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வை ரத்து செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை உருவாகி இருந்தது.

    இதுதொடர்பாக அனைத்து தரப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள சூழ்நிலையில் 10-ம் வகுப்பு, பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து முதல்-மந்திரி, மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், கல்வித்துறை நிபுணர்கள், எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்தேன். மாணவர்களின் எதிர்காலம், அவர்களின் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கர்நாடகத்தில் 2020-21-ம் ஆண்டிற்கான பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வை ரத்து செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாணவர்களின் தேர்வு முடிவு, அவர்கள் முந்தைய அதாவது பி.யூ.கல்லூரி முதலாமாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேர்வு முடிவை அறிவிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து வெளியிடும். இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.

    இந்த முறையில் வழங்கப்படும் மதிப்பெண்கள் மீது மாணவர்களுக்கு திருப்தி இல்லை என்றால், அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு இந்த தேர்வு நடத்தப்படும். மறுதேர்வு எழுத பதிவு செய்து கொண்ட தனி தேர்வர்களுக்கு இந்த முடிவு பொருந்தாது. பள்ளி கல்வித்துறை பின்னர் நடத்தும் தேர்வில் அந்த தேர்வர்கள் பங்கேற்று தேர்வை எழுத வேண்டும்.

    கர்நாடகத்ததில் 10-ம் வகுப்பு தேர்வை 8.76 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். இந்த மாணவர்கள் தேர்வை நடத்தினால் 6 நாட்கள் வகுப்பறைகளுக்கு வர வேண்டும். இந்த கொரோனா நெருக்கடியான நிலையில் 6 நாட்கள் வருவது என்பது கடினமான ஒன்று. அதனால் மாணவர்களின் கல்வி நலன், அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை கருதி 6 பாடங்களை ஒருங்கிணைத்து புதிய முறையில் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளோம்.

    அந்த மாணவர்களுக்கு மொத்தம் 2 தேர்வு நடத்தப்படும். அதாவது அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்தப்படும். அதே போல் கன்னடம் உள்பட 3 மொழி தேர்வுகள் ஒன்றாக ஒருங்கிணைப்படும். ஒரு தேர்வில் ஒரு பாடத்திற்கு 40 மதிப்பெண்கள் வீதம் 120 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். 2 தேர்வுகளுக்கும் சேர்த்து மொத்தம் 240 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. கேள்வித்தாளில் விடைகள் வழங்கப்பட்டு, சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

    மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவற்றை பாட வாரியாக பிரித்து வழங்கப்படும். தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும். 2 தேர்வுக்கு இடையே 3 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படும். தேர்வு தேதி 20 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும். அனேகமாக ஜூலை மாத இறுதியில் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

    ஒருவேளை கொரோனா பரவல் குறையாவிட்டால், இந்த தேர்வையும் ரத்து செய்வது குறித்து அப்போது கூடி ஆலோசித்து முடிவு எடுப்போம். இந்த தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்த்தப்படும். சொந்த ஊரில் உள்ள மாணவர்கள், அருகில் உள்ள மையங்களில் தேர்வு எழுத முடியும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

    ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 12 மாணவர்கள் மட்டுமே உட்கார வைக்கப்படுவார்கள். ஒரு மேஜையில் ஒரு மாணவர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு என்.95 முகக்கவசம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் முழுமையாக பின்பற்றப்படும். தேர்வு மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.

    தேர்வு பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். பி.யூ.கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புளுக்கான பொது நுழைவு தேர்வை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், இது அவர்கள் சந்திக்கும் பொது நுழைவு தேர்வு மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், அது முழுக்க முழுக்க நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடக்கிறது.

    இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

    இந்த பேட்டியின்போது, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உமாசங்கர், பி.யூ.கல்லூரி பிரிவு இயக்குனர் ஸ்னேகல், பள்ளி கல்வித்துறை கமிஷனர் அன்புக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×