search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த நிபுணர் குழு பரிந்துரை: மந்திரி சுதாகர்

    அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழு, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்வார்.
    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களுருவில் நேற்று தனது துறை அதிகாரிகளுடன் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் அனைத்து மாவட்ட, தாலுகா ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்படும். அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் 80 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் நல வார்டுகள் உருவாக்கப்படும். தேவைப்பட்டால் குழந்தைகள் நல டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க எம்.பி.பி.எஸ். டாக்டர்களுக்கு ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம் மூலம் உரிய பயிற்சி அளிக்கப்படும்.

    கொரோனா 2-வது அலையில் உருமாற்றம் அடைந்த வைரஸ்களை கண்டுபிடிக்க மாநிலத்தில் 7 இடங்களில் மரபணு கண்டறியும் ஆய்வகங்கள் அமைக்கப்படும். இவற்றில் 5 ஆய்வகங்கள் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், மங்களூரு, விஜயாப்புரா மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் அமைக்கப்படும். இந்த ஆய்வகங்கள், வைரசின் தன்மையை அறிந்து கொள்ளவும், அதற்கேற்ப நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவும்.

    அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழு, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்வார். கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் அதாவது கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு கீழ் குறைய வேண்டும். அவ்வாறு வைரஸ் பரவல் குறைந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

    கருப்பு பூஞ்சை நோய் குணப்படுத்தக்கூடியது தான். சிலருக்கு இந்த நோய், கண்கள் வரை பரவியுள்ளது. அத்தகையவர்களின் கண்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கண்களை அகற்றினால் தான் அந்த வைரஸ் மூளைக்கு பரவுவதை தடுக்க முடியும். இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு எத்தகையை சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர்கள் குழு முடிவு செய்யும்.

    இந்த நோய்க்கான மருந்துகளை பெற மத்திய அரசுடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்களின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டனர். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் இந்த நோய் பரவலுக்கு காரணமாக உள்ளது. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது. கொரோனா பரவல் தொடர்பாக நாங்கள் எந்த தகவலையும் மூடிமறைக்கவில்லை.

    கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது. அது இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. வைரஸ் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேதி, நேரம் ஒதுக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மறுக்கக்கூடாது. அவ்வாறு தடுப்பூசி போட மறுக்கும் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×