search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் சப்ளை சவாலாக இருந்தது - பிரதமர் மோடி மனம் திறந்து பேச்சு

    கொரோனாவின் 2-வது அலையில் ஆக்சிஜன் தேவை, மிகப்பெரிய சவாலாக அமைந்ததாக பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியின் ‘மனதின் குரல்’ (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் நாட்டு மக்களுடன் பேசுகையில் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நாடு எவ்வாறு முழு பலத்துடன் போராடி வருகிறது என்பதைப் பார்க்கிறோம். கடந்த 100 ஆண்டுகளில் இது மிகப்பெரிய தொற்றுநோய். இதனிடையே அம்பான், நிசார்க் புயல்கள், வெள்ளங்கள், நில நடுக்கங்கள், நிலச்சரிவுகளையும் சந்தித்தோம். இந்த 10 நாளில் டவ்தே, யாஸ் புயல்களை நாடு சந்தித்தது. இந்த புயல்களால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. நாடும், நாட்டு மக்களும் முழு பலத்துடன் போராடி, குறைந்தபட்ச உயிரிழப்பை உறுதி செய்தனர். முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகிறபோது தற்போது அதிகபட்ச மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடிகிறது.

    இந்த இயற்கைப்பேரிடர்களை சந்திப்பதில் மத்திய, மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டன. இதில் தங்களுக்கு அன்பானவர்களை இழந்த எல்லா மக்களிடமும் என் இதயம் செல்கிறது. இந்த பேரழிவின் சுமைகளை எதிர்கொண்டவர்களோடு நாம் அனைவரும் உறுதியுடன் நிற்போம்.

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நமது டாக்டர்கள், நர்சுகள், முன்களப்பணியாளர்கள் இரவு பகலாக எவ்வாறு உழைத்தார்கள் என்பதை நாம் பார்த்தோம். கொரோனா 2-வது அலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சியை கேட்டு வருகிறவர்கள் நமோ ஆப் மூலம் தொடர்பு கொண்டு, கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வருகிறவர்களை பாராட்டுமாறு கேட்டுக்கொண்டனர்.

    2-வது அலை வந்தபோது ஆக்சிஜனுக்கான தேவை திடீரென அதிகரித்தது. இது உண்மையிலேயே மிகப்பெரிய சவாலாக அமைந்தது. நாட்டின் கடைக்கோடி பகுதிகளுக்கும் மருத்துவ ஆக்சிஜனை வழங்குவது மிகப்பெரிய பணியாக இருந்தது. ஆக்சிஜன் டேங்கர்கள் அதிவேகமாக சென்றால். ஒரு சிறிய தவறுகூட மிகப்பெரிய வெடிப்பு ஆபத்துக்கு வழிவகுத்து விடும். தொழில்துறை ஆக்சிஜனை உற்பத்தி செய்கிற ஆலைகள், நாட்டின் கிழக்கு பகுதிகளில் உள்ளன. அங்கிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கு பல நாட்கள் எடுக்கும். இந்த சவாலை சந்திப்பதில், நாட்டில் கிரையோஜெனிக் டேங்கர் டிரைவர்கள், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், விமானப்படை விமானிகள்... இப்படி பல பேர் போர்க்கால அடிப்படையில் உதவினார்கள். லட்சக்கணக்கானோர் உயிர்களைக் காப்பாற்றினார்கள்.

    நாடு வழக்கமாக ஒரு நாளில் 900 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன்தான் உற்பத்தி செய்து வந்தது. தற்போது அதன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்து, நாள் ஒன்றுக்கு 9,500 டன் உற்பத்தி நடைபெறுகிறது. நமது வீரர்கள் இந்த ஆக்சிஜனை நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு செல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் உத்தரபிரதேச மாநிலம், ஹசன்பூர் கிராமத்தைச் சேர்ந்த திரவ ஆக்சிஜன் டேங்கர் டிரைவர் தினேஷ் உபாத்யாய் என்பவருடன் கலந்துரையாடினார். அவரது குடும்ப விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் தனக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள், பெற்றோர் இருப்பதாகவும், பிள்ளைகள் நன்றாக படித்து வருவதாகவும் கூறினார். தான் 15 அல்லது 17 வருடங்களாக ஆக்சிஜன் டேங்கர் டிரைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    அப்போது வியந்துபோன பிரதமர் மோடி, “15,17 வருடங்களாக ஆக்சிஜன் எடுத்துச் செல்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் வெறும் லாரி டிரவர் அல்ல. ஒரு விதத்தில், லட்சக்கணக்கான மக்களின் உயர்களைக் காப்பாற்றும் பணியில் இருக்கிறீர்கள்” என கூறி பாராட்டினார்.

    பிரதமர் மோடியிடம் அவர் நிச்சயமாக நாம் ஒரு நாள் கொரோனாவை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவருக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

    ஆக்சிஜன் டேங்கர்கள், கண்டெய்னர்கள் எடுத்துவரும் பணியில் ஈடுபட்டுள்ள விமானப்படை குரூப் கேப்டன் ஏ.கே. நாயக்குடனும் பிரதமர் மோடி உரையாடினார்.

    விமானப்படை குரூப் கேப்டன் ஏ.கே. நாயக்


    பிரதமர் மோடியுடன் பேசுகிறபோது ஏ.கே.நாயக், “சார் ஜெய்ஹிந்த், நான் ஹிண்டான் விமானப்படை நிலையத்தில் இருந்து குரூப் கேப்டன் ஏ.கே. பட்நாயக் பேசுகிறேன்” என கம்பீரமாக சொன்னார்.

    அவரிடம் பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்றி வருகிறீர்கள். உலகைச்சுற்றிலும் சென்று டேங்கர்களை கொண்டு வந்து வினியோகிக்கிறீர்கள். ஒரு வீரராக நீங்கள் மாறுபட்ட பணியை நீங்கள் செய்து வருகிறீர்கள். போரிட ஓட வேண்டிய நீங்கள், இப்போது உயிர்களைக் காப்பாற்ற ஓடுகிறீர்கள்” என குறிப்பிட்டார்.

    கடந்த ஒரு மாதமாக ஆக்சிஜன் டேங்கர்களையும், கண்டெய்னர்களையும் உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். விமானப்படை 3 ஆயிரம் மணி நேரம் பறந்து 160 சர்வதேச பயணங்களை முடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    அவர் எந்தெந்த வெளிநாடுகளுக்கு இப்போது சென்று வந்திருக்கிறார் என்று பிரதமர் மோடி விசாரித்தார். அதற்கு அவர் குறைந்த காலத்தில் சிங்கப்பூர், துபாய், பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து போய் வந்ததாக கூறினார்.

    பிரதமர் மோடியுடன் தான் பேசும்போது, தனது மகள் ஆதித்தியும் உடனிருப்பதாக தெரிவித்தார். உடனே பிரதமர் மேடி 12 வயதான அந்த சிறுமியிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது அந்த சிறுமி, தன் அப்பாவை எண்ணி பெருமைப்படுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
    Next Story
    ×