search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    மத்திய அரசிடம் திட்டமிடல் இல்லாததால்தான் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு - பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

    மத்திய அரசிடம் திட்டமிடல் இல்லாததால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது என்று பிரியங்கா காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு போராடி வருகிற வேளையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்று தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது தொடர்பாக எழுதி இருப்பதாவது:-

    கொரோனாவின் 2-வது அலை பொங்கி எழுந்தவுடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பற்றிய புகார்கள் வந்தன. பலர் ஆக்சிஜன் இன்றி இறந்தார்கள். நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட யார் காரணம்? இந்தியா, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள நாடு அல்ல.

    மே 1-ந் தேதி 7,603 டன், 6-ந் தேதி 8,920 டன், 9-ந் தேதி 8,944 டன், 20-ந் தேதி 8,344 டன் ஆக்சிஜன் என ஒவ்வொரு நாளும் இப்படி இந்தியாவில் உள்ள எல்லா ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஒரு நாளின் பற்றாக்குறை 1,500 டன்னுக்கும் குறைவுதான். ஆக எங்கே தவறு நடந்துள்ளது?

    மோடி அரசு கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான ஏற்றுமதி, வங்காளதேசத்துக்கு நடந்துள்ளது. உபரியான ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும் எந்த முதலீடும் செய்யவில்லை. திறமையின்மைக்கு அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டு, மோடி அரசு ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளில் இருந்து ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் எடுத்துச்செல்ல போக்குவரத்து வசதிக்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை.

    ஆக்சிஜன் வினியோகத்துக்கு தற்செயல் திட்டம் எதுவும் ஏன் வகுக்கவில்லை?

    உயர் அதிகாரம் பெற்ற குழு 6-ன் ஆலோசனைகள் ஏன் புறக்கணிக்கப்பட்டன ? கிரையோனிக் டேங்கர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான எந்தவொரு ஏற்பாடும் ஏன் செய்யப்படவில்லை ?

    சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற குழு பரிந்துரைகள் ஏன் கண்டுகொள்ளப்படவில்லை ?

    ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலை மற்றும் அவற்றை மீண்டும் நிரப்புவதில் எந்த கட்டுப்பாடும் ஏன் விதிக்கப்படவில்லை ?

    2-வது அலையில் உயிர்களை பேரழிவுக்கு உட்படுத்திய ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு மோடி அரசிடம் சரியான திட்டமிடல் இல்லாததும், திறமை இல்லாததும்தான் காரணம் என்பது தெளிவாகிறது. இது, அவர்கள் பொதுமக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நேரம்.

    இவ்வாறு அதில் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
    Next Story
    ×