search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தாராவியில் 2-வது கொரோனா அலை கட்டுப்படுத்தப்பட்டது எப்படி?: அதிகாரி தகவல்

    மும்பையின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்கும் தாராவிவாசிகளுக்கு தொடர்ந்து சோதனை, பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தற்போதும் கூட 11 காய்ச்சல் கிளினிக்குகள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    மும்பை :

    ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி ஆட்கொல்லி கொரோனா வைரஸ் ஊடுறுவியது. அதன்பிறகு அங்கு வைரஸ் வேகமாக பரவியது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள அங்கு வைரசை எப்படி கட்டுப்படுத்த போகிறார்கள் என உலகமே உற்று நோக்கியது. எனினும் அங்கு வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.

    தாராவியில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை உலக சுகாதார அமைப்பே பாராட்டியது. டிசம்பர், ஜனவரியில் அங்கு பாதிப்பு ஒற்றை இலக்கங்களில் தான் இருந்தது. இந்தநிலையில் பிப்ரவரியில் இருந்து 2-வது கொரோனா அலையால் அங்கு மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. குறிப்பாக ஏப்ரல் 8-ந் தேதி 99 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் அங்கு மீண்டும் பாதிப்பு கட்டுப்பட்டுள்ளது. கடந்த புதன், வியாழக்கிழமைகளில் அங்கு முறையே 3, 4 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    இதேபோல தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆக குறைந்து உள்ளது.

    இந்தநிலையில் ‘தாராவி மாதிரி' திட்டம், கொரோனா தடுப்பூசியால் தான் 2-வது அலை அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். ‘தாராவி மாதிரி' திட்டம் என்பது கொரோனா நோயாளிகளை தேடுதல், கண்டறிதல், சோதனை செய்தல் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தல் ஆகியவை ஆகும்.

    இந்தநிலையில் தாராவியில் நோய் பரவல் கட்டுபடுத்தப்பட்டது குறித்து மாநகராட்சி அதிகாரி கிரன் திகாவ்கர் கூறியதாவது:-

    டிசம்பர், ஜனவரி தொடக்கத்தில் பாதிப்பு குறைவாக இருந்த போதும் நாங்கள் சோதனை, கண்டறிவதை தீவிரப்படுத்தினோம். பிப்ரவரியில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியவுடன் முதல் அலையின் போது நோய் பரவலை கட்டுப்படுத்த உதவிய ‘தாராவி மாதிரி' திட்டத்தை செயல்படுத்தினோம். இதன்படி நோய் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு, வீடாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மும்பையின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்கும் தாராவிவாசிகளுக்கு தொடர்ந்து சோதனை, பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தற்போதும் கூட 11 காய்ச்சல் கிளினிக்குகள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடமாடும் சோதனை பிாிவுகளும் செயல்பட்டு வருகின்றன. பாதிப்பு குறைந்ததால் நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை கைவிடவில்லை. தாராவியில் பாதிப்பு ஜீரோ ஆகும் வரை தொடர்ந்து தீவிரமாக சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

    அதிகளவில் தடுப்பூசி போடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதுவரை 27 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தாராவியில் இதுவரை 6 ஆயிரத்து 802 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 ஆயிரத்து 398 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 50 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த ஆண்டு மே மாதம் முதல் 354 பேர் அங்கு ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.
    Next Story
    ×