search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரகாஷ் ஜவடேகர்
    X
    பிரகாஷ் ஜவடேகர்

    மக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ராகுல்காந்தி ஏற்படுத்துகிறார்: பிரகாஷ் ஜவடேகர்

    நாட்டில் கொரோனா தொற்று வேகத்தைத் தடுக்க பிரதமர் மோடி உழைத்துவரும் வேளையில், அவரை விமர்சிக்கும் ராகுல் காந்தியின் வார்த்தைகளும், தொனியும், அரசைக் குறைகூறும் ஆவணத்தின் (டூல்கிட்) பின்னணியில் காங்கிரஸ் இருப்பதைக் காட்டுகிறது.
    புதுடெல்லி :

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் கொரோனா 2-வது அலைக்கு பிரதமர் மோடிதான் காரணம். தடுப்பூசி போடும் பணி இதேபோல மெதுவாக நடைபெற்றால் மேலும் பல அலைகள் ஏற்படும். உலகத்தின் தடுப்பூசி தலைநகரமாக இந்தியா இருந்தபோதிலும், இதுவரை 3 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்நிலையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் கொரோனா தொற்று வேகத்தைத் தடுக்க பிரதமர் மோடி உழைத்துவரும் வேளையில், அவரை விமர்சிக்கும் ராகுல் காந்தியின் வார்த்தைகளும், தொனியும், அரசைக் குறைகூறும் ஆவணத்தின் (டூல்கிட்) பின்னணியில் காங்கிரஸ் இருப்பதைக் காட்டுகிறது. அதன் ஓர் அங்கமாகவே ராகுல் காந்தியின் விமர்சனம் அமைந்திருக்கிறது.

    தற்போது அது உறுதியாகி இருக்கிறது. வேறு சான்றே தேவையில்லை. அந்த ஆவணம் உங்களால் தயாரிக்கப்பட்டதுதான். அந்த அரசியலின் ஓர் அங்கமாகத்தான் நீங்கள் (ராகுல் காந்தி) மக்கள் மத்தியில் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்த முயல்கிறீர்கள்.

    நீங்கள் கூறியிருப்பது, நாட்டையும், நாட்டு மக்களையும் அவமதிப்பதாகும்.

    நாட்டில் தடுப்பூசி போடும் பணி வருகிற டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என்று சுகாதார அமைச்சகம் ஏற்கனவே கூறியிருக்கிறது. டிசம்பருக்குள் எப்படி 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும், 108 கோடி மக்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடப்படும் என்ற விளக்கத்தையும் அது அளித்திருக்கிறது.

    நாட்டில் தடுப்பூசி போடும் பணி மெதுவாக நடைபெறுவதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் இந்தியா உலகளவில் 2-வது இடத்தில் இருக்கிறது. வருகிற ஆகஸ்டு மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி பெரிய அளவில் நடைபெறப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×