search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    மேகதாது அணை விவகாரத்தில் எடியூரப்பா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் முக்கிய முடிவு

    மேகதாது அணை திட்ட விவகாரத்தில் ஆய்வுக்குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை வாபஸ் பெற கோரி அதே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்ய எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    பெங்களுரு :

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9,000 கோடியில் புதிய அணை ஒன்றை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த அணையை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மாநில அரசு தயாரித்து, அனுமதிக்காக மத்திய ஜல்சக்தி துறையிடம் தாக்கல் செய்துள்ளது. அந்த திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இந்த அணை கட்டப்படுவதால் சுமார் 5 ஆயிரம் எக்டேர் வன நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது சுற்றுச்சூழலுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த மேகதாது திட்டத்தின் முக்கிய நோக்கம் பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவது தான். பெங்களூரு மட்டுமின்றி வழியில் உள்ள அதாவது மேகதாது அணையில் இருந்து பெங்களூரு வரை உள்ள பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், அணை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளதாகவும், இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களுருவில் 27-ந் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள அவரது காவேரி இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை, தலைமை செயலாளர் ரவிக்குமார், அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி, நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ்சிங் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் குழு அமைத்து பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மேகதாது திட்ட பணிகள் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் நடைபெறுவதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த பத்திரிகையில், மேகதாதுவில் ஒரு சாலை போடப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி, மேகதாது பகுதியை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்தது சரியல்ல. அதனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதே தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த உத்தரவை வாபஸ் பெற கோரி மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
    Next Story
    ×