search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி -புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை

    புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார்.
    கொல்கத்தா:

    வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே நேற்று முன்தினம் கரை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. மேலும் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல் ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    பிரதமர் மோடி

    இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக இன்று காலை விமானம் மூலம் மேற்கு வங்க மாநிலம் செல்கிறார். கலைகுண்டா விமானப்படை தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடியை பிரதமரை மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கார் வரவேற்கிறார். 

    இதேபோல் கலைகுண்டா விமான தளத்தில் பிரதமரை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் சந்திக்க உள்ளார். அப்போது புயலால் ஏற்பட்ட சேத விவரம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் இருவரும் மாநிலத்தில் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை தனித்தனியாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டபின்னர், பாதிப்பு குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். இதில் ஆளுநரும் பங்கேற்க உள்ளார்.
    Next Story
    ×