search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மீட்பு குழுவினர்.
    X
    ஒடிசாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மீட்பு குழுவினர்.

    யாஸ் புயலால் 3 லட்சம் வீடுகள் சேதம்- ஒரு கோடி மக்கள் பாதிப்பு

    யாஸ் புயலின் கோர தாண்டவத்தில் மேற்கு வங்கத்தில் மட்டும் ஒரு கோடி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
    புவனேஸ்வரம்:

    வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தம், கடந்த 22-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இது புயலாக உருவெடுத்ததை தொடர்ந்து இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்த புயல் 3 நாட்களுக்கு முன்பு அதிதீவிர புயலாக மாறியது. நேற்று முன்தினம் பாலசோர் பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த புயல் அங்கிருந்து மெல்ல நகர தொடங்கியது.

    நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வடமேற்கு வங்க கடல் பகுதியில் தம்ராவுக்கு கிழக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டது. அங்கிருந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து பிற்பகல் வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடற்கரை இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே பாலசோர் பகுதியில் கரையை கடந்தது.

    புயல் கரையை கடக்கும் போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று புயல் கரையை கடக்கும் போது சுமார் 130 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

    இதனால் மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. ஒடிசாவின் பாலசோர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிழக்கு மித்னாபூரின் திகா என்ற கடற்கரை நகரம் முழுமையாக சேதம் அடைந்தது. 

    புயலின் கண் பகுதி கடந்து செல்ல 3 மணி நேரம் ஆனது. புயல் முற்றிலும் கடந்து சென்ற பின்னர் அந்த பகுதி முழுவதும் சின்னாபின்னமாகி இருந்தது. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளின் கூரைகளும் சேதம் அடைந்தன.

    புயல் மழையில் சிக்கி ஒடிசாவில் 3 பேரும், மேற்கு வங்கத்தில் ஒருவரும் என 4 பேர் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே யாஸ் புயலின் கோர தாண்டவத்தில் மேற்கு வங்கத்தில் மட்டும் ஒரு கோடி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    ஒடிசா மாநிலம் பாலசோரில் புயல் பாதித்த பகுதியில் முறிந்து விழுந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்பு படையினர்.

    இவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இதுபோல மாநிலம் முழுவதும் புயல், மழையால் சுமார் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். அவற்றை கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் நிவாரண முகாம்களில் தேவையான பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். இதுபோல ஒடிசா மாநிலத்திலும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இப்பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியிலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளனர்.

    மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பாராட்டினார். மேலும் புயல் பாதித்த பகுதிகளில் அடுத்த 24  மணி நேரத்தில் மின் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
    Next Story
    ×