search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    மேகதாது திட்டத்தை ஆய்வு செய்ய குழு: எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம்

    மேகதாது திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) நடக்க உள்ளதாக சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடகம்-தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக காவிரி ஆறு விளங்குகிறது.

    இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறும் தமிழகம், மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    ஆனாலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்திடம் கர்நாடகம் தாக்கல் செய்துள்ளது. இந்த அணை கட்டினால் சுமார் 5 ஆயிரம் எக்டேர் வன நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வனப்பகுதி மூழ்குவதால் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்டும் பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளதாக செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து, நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு குழுவை அமைத்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

    இதுகுறித்து கர்நாடக சட்டத்துறை மற்றும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களுருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மேகதாது திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவை மேகதாதுவுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஒரு பத்திரிகையில் வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மேகதாதுவுக்கு வரவுள்ள குழுவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவது குறித்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நாளை (இன்று) உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. இதில் மாநில அரசின் அட்வகேட் ஜெனரல், நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகள், மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினையில் அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர்கள், மூத்த வக்கீல்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மேகதாது திட்டம் குறித்து யாரும் அதிகாரப்பூர்வமாக புகார் கொடுக்காத நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. அதனால் நாங்கள் இதுகுறித்து சட்ட ஆலோசனை நடத்துகிறோம். மேகதாது திட்டம் குறித்து நங்கள் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து விவரங்களையும் வழங்கியுள்ளோம். கர்நாடகம் தனக்கு ஒதுக்கப்பட்ட நீரை பயன்படுத்துகிறது. இத்தகைய நேரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம், குழுவை அமைத்தது நியாயமா?, இது சட்டப்படி சரியா? என்ற கேள்வி எழுகிறது.

    அதனால் இந்த விஷயத்தில் கர்நாடகத்தின் நலனை காப்பது எங்களின் கடமை. எந்த ரீதியில் செயல்பட வேண்டும் என்பது குறித்து நாளை (இன்று) கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்வோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
    Next Story
    ×