search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    டாக்டர்கள் உள்பட மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: மந்திரி சுதாகர்

    கொரோனா ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் உள்பட மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
    பெஙகளூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுகாதாரத்துறையை பலப்படுத்தும் நோக்கத்தில் புதிதாக 2,811 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் பணியில் சேருவார்கள்.

    வட கர்நாடகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும். கதக், ராய்ச்சூர், உப்பள்ளி, பெலகாவி ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கர்நாடகத்திற்கு மத்திய அரசு 1,200 டன் ஆக்சிஜனை ஒதுக்கியுள்ளது

    அனைத்து கொரோனா ஆஸ்பத்திரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள் சரியாக பணியாற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க முடியும். சுகாதார உதவியாளர்களின் பெயர், அதிகாரிகள் என்று பெயர் மாற்றம் செய்துள்ளோம். கொரோனா ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது டாக்டர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.8 ஆயிரம், டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆஷா மருத்துவ ஊழியர்களுக்கு மாதந்தோறும் முதல் வாரத்திற்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 17 மாவட்டங்களில் பணியாற்றும் ஆஷா ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கும் ஊழியர்களுக்கு மிக விரைவிலேயே நிலுவை சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.

    கர்நாடகத்தில் இதுவரை 446 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 433 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 11 பேர் வீடுகளில் உள்ளனர். அவர்களையும் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்.

    இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு 1,030 ஆம்போடெரிசின் மருந்து குப்பிகளை ஒதுக்கியுள்ளது. அது விரைவில் கர்நாடகத்திற்கு வரும். கர்நாடகத்தில் 555 சாதாரண ஆம்புலன்சுகள், 157 நவீன ஆம்புலன்சுகள் உள்ளன. மத்திய அரசிடம் இருந்து 530 வென்டிலேட்டர் கருவிகள் வந்துள்ளன. இவை ஆம்புலன்ஸ் வாகனங்களில் பொருத்தப்படும். கர்நாடகத்தில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் தொலைதூர அடிப்படையில் ஐ.சி.யு. மருத்துவ சிகிச்சைகள் குறித்த ஆலோசனை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    கர்நாடகத்தில் இதுவரை 1.22 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசிடம் தற்போது 11.46 லட்சம் டோஸ் இருப்பு உள்ளது. மக்களை முன்னுரிமை அடிப்படையில் பிரித்து தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    மருத்துவத்துறையினர் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். அத்தகையவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்துவது சரியல்ல. அவர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும். மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை அரசு சகித்துக்கொள்ளாது.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×