search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதானந்தகவுடா
    X
    சதானந்தகவுடா

    வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் ஆம்போடெரிசின் குப்பிகள் இறக்குமதி: சதானந்தகவுடா

    கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் ஆம்போடெரிசின் குப்பிகள் இறக்குமதி செய்யப்படுவதாக மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
    பெங்களூரு :

    மத்திய உரம், ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருக்கிறது. அதனால் கர்நாடகத்திற்கு இந்த வாரத்திற்கு 4.25 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வருகிற 24-ந் தேதிக்கு பிறகு ஒரு வாரத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடும் அதிகமாக இருக்கும்.

    நாட்டில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. அந்த நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. கர்நாடகத்திற்கு 20 ஆயிரம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் ஒதுக்குமாறு அரசு கேட்டுள்ளது. இந்த மருந்தின் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மைலான் மருந்து நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் மருந்து குப்பிகள் நாளை (அதாவது இன்று) இந்தியா வருகின்றன. இதில் கர்நாடகத்திற்கு அதிகளவில் மருந்து ஒதுக்கப்படும்.

    கர்நாடகத்திற்கு இதுவரை 500 டன் திரவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை நமது மாநிலத்திற்கு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. இதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கிராமங்களில் உள்ள சமுதாய பவன்கள், விடுதிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.14 ஆயிரத்து 775 கோடி உர மானியம் வழங்கியுள்ளது. இது பிரதமர் மோடிக்கு விவசாயிகள் மீதான அக்கறையை எடுத்துக் காட்டுகிறது. இதனால் கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.750 கோடி அளவுக்கு மிச்சமாகும்.

    இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.
    Next Story
    ×