search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜேஷ் தோபே
    X
    ராஜேஷ் தோபே

    கருப்பு பூஞ்சை நோய் தான் அரசு முன் இருக்கும் தற்போதைய பெரும் கவலை: மந்திரி ராஜேஷ் தோபே

    மகாராஷ்ராவில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் இதுவரை 90 பேர் இறந்துள்ளனர். இது தீவிரமான பிரச்சினையாகும். சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது.
    மும்பை :

    மகாராஷ்ராவில் கொரோனா பாதிப்பு ஆட்டிப்படைத்துவரும் நிலையில், புதிய தலைவலியாக தொற்றுக்கு ஆளானவர்களில் சிலருக்கு ‘மியூகோமைசோசிஸ்’ என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டு உள்ளது.

    கொரோனா சிகிச்சையின் போது ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாக எடுத்தும் கொள்ளும் மற்றும் சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்த நோய் பாதித்தவர்கள் அதிகளவில் உயிரிழப்பது வேதனைக்குரிய அம்சமாகும்.

    இந்தநிலையில் மராட்டியத்தில் இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு காரணமாக இதுவரை 90 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாராஷ்ராவில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் இதுவரை 90 பேர் இறந்துள்ளனர். இது தீவிரமான பிரச்சினையாகும். சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் ஸ்டீராய்டு மருந்தை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    கடுமையான நீரிழிவு நோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணிகளும் இந்த நோய் தாக்கத்திற்கு வழிவகுக்கும்.

    மராட்டிய அரசு இந்த நோய் பாதிப்பை சமாளிக்க தயாராக உள்ளது. கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு 9 பக்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    காய்ச்சிய அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துதல் உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் அதில் இணைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நோய் பாதிப்பு காரணமாக இதுவரை 1,500 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 500 பேர் குணமடைந்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மகாராஷ்ராவில் 17 மாவட்ட கலெக்டர்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபேயும் கலந்து கொண்டார்.

    அபபோது அவர் பிரதமரிடம் கூறியதாவது:-

    கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து தேவை குறைந்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தான் அரசு முன் இருக்கும் பெரிய கவலையாக உள்ளது.

    இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க அம்போடெரிசின்-பி என்ற ஊசி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த ஊசி மருந்து தற்போது 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரை தேவைப்படுகிறது. ஆனால் 16 ஆயிரம் மருந்துகள் மட்டுமே மத்திய அரசால் மகாராஷ்ராவிற்கு கிடைத்து உள்ளது. இந்த மருந்தை அதிக அளவில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×