search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1,250 கோடி நிவாரண உதவி: எடியூரப்பா அறிவிப்பு

    கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள ஆட்டோ, கார் டிரைவர்கள் உள்பட பல்வேறு தொழிலாளர்களுக்கு ரூ.1,250 கோடி நிவாரண உதவி தொகுப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 11-ந் தேதி முதல் 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    வருகிற 24-ந் தேதி இந்த ஊரடங்கு நிறைவடைகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவு தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாமல் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பொதுமக்களின் தினசரி தேவையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள ஆட்டோ, கார் டிரைவர்கள் உள்பட பல்வேறு தொழிலாளர்களுக்கு ரூ.1,250 கோடி நிவாரண உதவி தொகுப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா முதல் அலையின்போதும் நிவாரண தொகுப்பு திட்டத்தை அரசு அமல்படுத்தியது.

    நிவாரண உதவி தொகுப்பு திட்டத்தின்படி மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் மலர் விவசாயிகள் பயன் பெறுவார்கள். அதே போல் பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் எக்டேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். இதன் மூலம் 69 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

    உரிமம் பெற்ற ஆட்டோ, வாடகை கார் டிரைவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். இதனால் 2.10 லட்சம் டிரைவர்கள் பயன் பெறுவார்கள். கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இவர்கள் கர்நாடக கட்டிட மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களான முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், மெக்கானிக்குகள், வீட்டு வேலை செய்பவர்கள், தையல் கலைஞர்கள் என மொத்தம் 3.4 லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

    தெருவோர வியாபாரிகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இவர்கள் 2.20 லட்சம் பேர் உள்ளனர். கலைஞர்கள், கலை குழுவினருக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் 16 ஆயிரத்து 95 பேர் பயன் பெறுவார்கள்.

    கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள விவசாயிகள், கடந்த 1-ந் தேதி தொடங்கி வருகிற ஜூலை 31-ந் தேதி வரை 3 மாதங்கள் கடனை திருப்பி செலுத்த தேவை இல்லை. இதனால் 4.25 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

    பிரதமரின் ‘கரீப்’ கல்யாண் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.

    இது மட்டுமின்றி மேலும் 30 லட்சம் பேருக்கு உணவு தானியம் வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.180 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 கோடியே 26 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள்.

    குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கும் தலா 10 கிலோ உணவு தானியம் வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு மேல் உள்ளோருக்கான (ஏ.பி.எல்.) அட்டைதாரர்களுக்கு உணவு தானியம் ஒரு கிலோ ரூ.15 விலையில் வழங்கப்படும். பெங்களூரு உள்பட நகரங்களில் உள்ள இந்திரா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ரூ.956 கோடி சிகிச்சை கட்டணத்தை அரசே செலுத்தியுள்ளது.

    18 முதல் 44 வயதுக்குட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக ரூ.1,000 கோடி செலவில் 3 கோடி டோஸ் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கிராம பஞ்சாயத்துகளுக்கு முதல்கட்டமாக தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அடுத்த 3 நாட்களில் 2 ஆயிரத்து 150 டாக்டர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    பேட்டியின்போது, துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×