search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஊழியர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தபோது எடுத்த படம்.
    X
    கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஊழியர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தபோது எடுத்த படம்.

    12 மணி நேரம் கடலில் நீந்தி கொண்டே இருந்தோம்: கப்பல் மூழ்கியதில் உயிர் பிழைத்தவர்கள் உருக்கம்

    ‘டவ்தே’ புயல் காரணமாக மும்பை அருகே எண்ணெய் கிணறில் வேலைபார்க்கும் ஊழியர்களின் கப்பல் 273 பேருடன் நடுக்கடலில் மூழ்கியது. இந்த துயர சம்பவத்தில் 22 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
    மும்பை :

    ‘டவ்தே’ புயல் காரணமாக மும்பை அருகே எண்ணெய் கிணறில் வேலைபார்க்கும் ஊழியர்களின் கப்பல் 273 பேருடன் நடுக்கடலில் மூழ்கியது. இந்த துயர சம்பவத்தில் 22 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் மாயமான 65 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து, உயிர் பிழைத்தவர்கள் கூறிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதில் கோலாப்பூரை சேர்ந்த மனோஜ் கிதே (வயது19) என்ற ஊழியர் கூறியதாவது:-

    கப்பல் மூழ்க தொடங்கியவுடன் நாங்கள் கவலை அடைந்தோம். நானும், மற்ற தொழிலாளர்களும் உயிர்காக்கும் ஜாக்கெட் அணிந்து கொண்டு தண்ணீரில் குதித்தோம். அது மிகவும் ஒரு மோசமான சூழ்நிலை. நான் உயிர்பிழைப்பேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை. ஆனால் உயிர் பிழைக்க வேண்டும் என்ற உறுதியுடன் 7 முதல் 8 மணி நேரம் நீச்சல் அடித்து கொண்டே இருந்தேன். அப்போது தான் கடற்படையால் மீட்கப்பட்டேன். ஆனால் கடலில் எனது ஆவணங்கள் மற்றும் செல்போன் போய்விட்டது.

    இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

    மனோஜ் கிதே கடந்த மாதம் தான் எண்ணெய் கிணறில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்து உள்ளார். தற்போது ஏற்பட்ட மோசமான அனுபவம் காரணமாக அவர் மீண்டும் எண்ணெய் கிணறு வேலைக்கு செல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார்.

    இதேபோல காயமடைந்த மற்றொரு ஊழியர், ‘‘கடற்படையால் தான் நாங்கள் இன்று உயிருடன் இருக்கிறோம். அவர்கள் இல்லையென்றால் எங்களுக்கு என்ன நடந்து இருக்கும் என்றே தெரியவில்லை. எங்களுடன் இருந்த ஒரு ஊழியர், புயல் பெரியளவில் இருக்காது என்றார். தற்போது அவரை காணவில்லை. அவரை தேடினோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என சோகத்துடன் கூறினார்.

    மேலும் ஒரு தொழிலாளி, ‘‘கப்பல் மூழ்க தொடங்கியவுடன் நள்ளிரவில் கடலில் குதித்துவிட்டேன். கடலில் மிதந்து கொண்டு இருக்க முயற்சி செய்தேன். கடற்படை என்னை காப்பாற்றும் முன் 12 மணி நேரம் நீந்தி கொண்டே இருந்தேன்’’ என்றார்.

    கப்பலின் உயரத்திற்கு மேல் கடலில் ராட்சத அலை வீசியதாக எண்ணெய் கிணறு பிட்டர் ஒருவர் கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘‘கடற்படை கப்பல் வருவதற்கு முன் என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் தூரத்தில் கடற்படை கப்பல் எங்களை நோக்கி வருவதை பார்த்தவுடன் நம்பிக்கை அதிகரித்துவிட்டது. அவர்கள் என்னை கண்டிப்பாக காப்பாற்றுவார்கள் என நம்பினேன். எனவே கடல் நீரில் குதித்து நீந்த தொடங்கினேன்’’ என்றார்.

    Next Story
    ×