search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ் அப்
    X
    வாட்ஸ் அப்

    புதிய தனியுரிமை கொள்கையை வாபஸ் பெற‘வாட்ஸ் அப்’புக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

    தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிர்வதற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ‘வாட்ஸ் அப்’ செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.
    புதுடெல்லி:

    வாட்ஸ் அப் தனது புதிய தனியுரிமை கொள்கையை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிர்வதற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ‘வாட்ஸ் அப்’ செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, வாட்ஸ் அப் ஒரு புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதில், வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தகவல்கள், அதன் தாய் நிறுவனமான ‘பேஸ்புக்’ பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளாதவர்கள், வாட்ஸ் அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 15-ந்தேதி, இந்த கொள்கை அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், கடும் எதிர்ப்பு எழுந்ததாலும், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதாலும் இக்கொள்கையை அமல்படுத்துவதை ‘வாட்ஸ் அப்’ நிறுவனம் தள்ளிவைத்துள்ளது.

    மத்திய அரசு


    இந்தநிலையில், புதிய தனியுரிமை கொள்கையை வாபஸ் பெறுமாறு வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வாட்ஸ் அப்புக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஏராளமான இந்தியர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தகவல் பகிர்வுக்கு வாட்ஸ் அப்பை சார்ந்தே இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, நியாயமற்ற நிபந்தனைகளை இந்திய பயனாளர்கள் மீது வாட்ஸ் அப் திணிக்க பார்ப்பது பொறுப்பற்ற செயல். அதிலும், ஐரோப்பிய பயனாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்திய பயனாளர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்.

    பேஸ்புக்குடன் தகவல்களை பகிர்வது தொடர்பாக பயனாளர்கள் மத்தியில் எழுந்த கவலையால் வாட்ஸ் அப் பின்னடைவை சந்தித்துள்ளது.

    தனியுரிமை கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள், கேள்வி-பதில் வடிவத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்திய செயல் ஆகியவை தகவல் அந்தரங்கம், தகவல் பாதுகாப்பு, பயனாளர்களின் விருப்பத்தேர்வு ஆகியவற்றை குழிதோண்டி புதைப்பதாக உள்ளன.

    இந்தியர்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளன. இந்த கொள்கையை தள்ளி வைத்துவிட்டதால், மேற்கண்ட பொறுப்புகளில் இருந்து விடுபட்டு விட்டதாக கருதக்கூடாது.

    இந்த கொள்கை, இப்போதுள்ள இந்திய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது. ஆகவே, இதை வாபஸ் பெற வேண்டும் என்று மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இக்கடிதத்துக்கு 7 நாட்களில் வாட்ஸ் அப் பதில் அளிக்க வேண்டும். திருப்திகரமான பதில் வராவிட்டால், சட்டத்துக்கு உட்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்தியர்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்ற சட்டப்படி எல்லா வாய்ப்புகளையும் அரசு பரிசீலிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×