search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலைகளில் வெள்ளம்
    X
    சாலைகளில் வெள்ளம்

    டவ் தே புயலுக்கு மகாராஷ்டிராவில் 6 பேர் பலி

    மகாராஷ்டிராவை டவ் தே புயல் தாக்கியதில் 6 பேர் பலியாகியுள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
    மும்பை:

    தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்கு ‘டவ் தே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த புயல் தீவிர புயலாக மாறி,  கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    டவ் தே புயல் நேற்று அதிதீவிர புயலாக மாறியது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், இன்று குஜராத் கடலோரப்பகுதியில் கரையை கடக்கிறது. அப்போது, மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யும். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    மகாராஷ்டிரா மாநில  கடலோர பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. மும்பையில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியது. புயலின் காரணமாக மும்பை விமான நிலையம் 11 மணிக்கு மூடப்பட்டது. பந்த்ரா-ஒர்லி கடல்வழிப் பாதையும் மூடப்பட்டது. மகாராஷ்டிராவின் ஜுஹு பகுதியில் அதிக கனமழை பெய்ததுடன், சூறாவளி காற்றும் வீசியது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    மும்பை கனமழை

    இந்நிலையில், டவ் தே புயல் தாக்கியதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டவ் தே புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர், 9 பேர் காயமடைந்துள்ளனர். 4 விலங்குகள் இறந்துள்ளன. புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து நிவாரணப் பணிகளை விரைந்து செய்யுமாறு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×