search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்தது ஏன்: சித்தராமையா கேள்வி

    கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைத்தது ஏன்? என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதாக நீங்கள் கூறி வருகிறீர்கள். மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது, பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் இருந்தால், வைரஸ் பரவலின் அலை குறைந்துள்ளதாக அர்த்தம்.

    ஆனால் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, பல்லாரி, ஹாசன், மைசூரு, பெலகாவி, சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

    பிற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு விகிதம் 35 சதவீதமாக இருக்கிறது. ஓரிரு மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு 20 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக கூறுவது சரியல்ல.

    பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துள்ள ஏன்? கொரோனா மரணங்களில் புள்ளி விவரங்களை அரசு மறைக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தினசரி 1.75 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அது தற்போது 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 1.15 லட்சமாக குறைந்தள்ளது.

    அத்துடன் தடுப்பூசி வினியோக பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மையங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்து நிற்கிறார்கள்.

    அரசின் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. பரிசோதனைகளை குறைத்துவிட்டு, கொரோனா பரவல் குறைந்துவிட்டதாக அரசு பொய் சொல்கிறது. அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமெரிக்காவில் 12 வயது நிரம்பிய குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இதனால் பெற்றோர் அதிக ஆதங்கத்தில் உள்ளனர்.

    அடுத்த 3 மாதங்களில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். நான் கூறியுள்ள அனைத்து அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் வழங்க வேண்டும். மும்பையை போல் வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும். கொரோனாவால் நிகழும் இறப்புகள் குறித்த விவரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×