search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து நோயாளியை வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றுவதற்காக ஆம்புலன்சில் ஏற்றப்படும் காட்சி.
    X
    கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து நோயாளியை வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றுவதற்காக ஆம்புலன்சில் ஏற்றப்படும் காட்சி.

    டவ்தே புயல்: மும்பையில் கொரோனா நோயாளிகள் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றம்

    டவ்தே புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா மெகா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 580 நோயாளிகள் மாநகராட்சி ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றப்பட்டனர். தடுப்பூசி போடும் பணி இன்றும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
    மும்பை :

    அரபி கடலில் உருவான ‘டவ்தே' புயல் தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. இந்த புயல் மேலும் வலுபெற்று நாளை (செவ்வாய்க்கிழமை) குஜராத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த புயல் மும்பை அருகே கடந்து செல்லும்போது மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மும்பையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளதால் புயலால் பாதிப்பு ஏற்படும் என கருதிய மும்பை மாநகராட்சி மெகா(ஜம்போ) கொரோனா சிகிச்சை மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 580 நோயாளிகளை நேற்று இரவு மாநகராட்சி ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றியது.

    இதில் பி.கே.சி.யில் உள்ள சிகிச்சை மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 234 பேரும், தாகிசரில் தங்கவைக்கப்பட்டு இருந்த 183 பேர் மற்றும் முல்லுண்டு கொரோனா சிகிச்சை மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 154 பேரும் அடங்குவர்.

    மேலும் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறு நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதேபோல மும்பை அருகே புயல் கடந்து செல்ல வாய்ப்புள்ளதால் பந்திரா- ஒர்லி கடல்வழி மேம்பாலத்தை மூடுவதற்கான சத்தியக்கூறுகள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    பலத்த காற்றின் காரணமாக சாலையில் பதாகைகள் விழுந்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும் ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் பேரிடர் சூழ்நிலையில் பொதுமக்களை காக்க மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்து இருந்தது.

    இந்தநிலையில் மும்பையில் தடுப்பூசி போடும் பணி இன்றும் (திங்கட்கிழமை) நடைபெறாது என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது.
    Next Story
    ×