search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஊழியர்களுக்கு பயிற்சி இல்லாததால் வெண்டிலேட்டர்கள் வந்தும் பயன்படுத்த தெரியவில்லை

    பல மாநிலங்கள் வெண்டிலேட்டரை பயன்படுத்த தெரியாமல் அவற்றை கிடப்பில் போட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா அலையின் 2-வது தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கொரோனா நோயாளிகள் அதிக பாதிப்புக்குள்ளாகும் போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனால் ஆக்சிஜன் செலுத்த வேண்டும். ஆனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், வெண்டிலேட்டர் பற்றாக்குறையும் நிலவுகிறது.

    இதனால் பல நோயாளிகள் மருத்துவமனைகளில் உயிரிழக்கும் சம்பவம் நாள்தோறும் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் பல மாநிலங்கள் வெண்டிலேட்டரை பயன்படுத்த தெரியாமல் அவற்றை கிடப்பில் போட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏனென்றால் வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டால் பல மாநிலங்கள் அல்லல் பட்டுக்கொண்டு இருக்கின்றன. அப்படி இருக்கும் போது கிடைத்த செயற்கை சுவாச கருவிகளை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது உண்மையில் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகும்.

    பி.எம்.கேர் திட்டத்தின் கீழ் பஞ்சாப்பில் உள்ள 3 மருத்துவ கல்லூரிகள் 320 வெண்டிலேட்டர்களை பெற்றது. ஆனால் இதில் 83 வெண்டிலேட்டரை மட்டுமே பயன்படுத்த முடிந்தது. 250-க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

    அவைகள் சரியாக இயங்கவில்லை என்பதால் கிடப்பில் போடப்பட்டதாக மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெண்டிலேட்டரை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு இருந்தது தெரியவந்தது.

    வெண்டிலேட்டர்கள்

    அசாமுக்கு 967 வெண்டிலேட்டர்கள் அனுப்பப்பட்டன. இதில் 141 கிடப்பில் போடப்பட்டுள்ளது. பீகாரில் 109-ல் 47-ம், சத்தீஸ்கரில் 230-ல் 77-ம், ராஜஸ்தானில் 1900-ல் 1400-ம், உத்தரபிரதேசம் 200-ல் 140-ம், கர்நாடகா 2025-ல் 1620-ம், மத்திய பிரதேசம் 967-ல் 141-ம் பயன்படுத்தப்படவில்லை.

    வெண்டிலேட்டர்களை இயக்குவதற்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும். பல மாநிலங்கள் தங்களுக்கு போதுமான ஐ.சி.யூ. வசதி இல்லை என்பதாலும், அவற்றை நிறுவ போதுமான இடம் இல்லை என்பதாலும் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு இருந்தது தெரிய வந்தது.

    மேலும் வெண்டிலேட்டர் தவறாக செயல்பட்டுவிடும் என்ற பயத்திலும் அதை உபயோகப்படுத்தவில்லை. பீகாருக்கு அனுப்பப்பட்ட வெண்டிலேட்டர்களில் கிட்டத்தட்ட பாதி பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாததால் செயல் இழந்து கிடந்தன. அதோடு வெண்டிலேட்டர்களை இயக்குவதற்கான கருவிகள் கிடைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளன.

    இதற்கிடையே மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள செயற்கை சுவாச கருவிகளை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள மாநிலங்கள் குறித்து தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×