search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி- மத்திய அரசு உறுதி

    பல மாநிலங்களில் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டது.

    முதலில் முன்கள பணியாளர்களுக்கும் அதன்பின் 60 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. சமீபத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதித்தது.

    ஆனால் பல மாநிலங்களில் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.

    இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராக இருக்கும் என்றும் அனைவருக்கும் (18 வயதுக்கு மேல்) தடுப்பூசி கிடைத்து விடும் என்றும் நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார்.

    கொரோனா தடுப்பூசி

    இந்தநிலையில் டிசம்பர் மாதத்துக்குள் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கிடைப்பதை விரைவாக அதிகரித்து தற்போது உள்ள நெருக்கடியான 18-44 வயது உட்பட்டவர்களுக்கு ஜூலை மாதத்துக்குள் தடுப்பூசி கிடைப்பது எளிதாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இதைத்தொடர்ந்து இந்தியாவில் 18 வயதுக்கு மேல் உள்ள 95 கோடி பேருக்கு வருகிற டிசம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி போட முடியும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயது மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கை நாங்கள் அடைய முடியும் என்ற முழு நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் உள்ளது. இந்திய உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசிகள் பெறப்படுவதால் தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கையில் பற்றாக்குறை இருக்காது. இதனால் தடுப்பூசி போட விரும்புபவர்களுக்கு எளிதாக வழங்க முடியும்.

    மே மாதத்தில் 8.5 கோடி, ஜூன் மாதத்தில் 10 கோடி, ஜூலை மாதத்தில் 15 கோடி, ஆகஸ்டில் 36 கோடி, செப்டம்பரில் 50 கோடி, அக்டோபரில் 56 கோடி, நவம்பரில் 59 கோடி, டிசம்பரில் 65 கோடி தடுப்பு மருந்து டோஸ்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×