search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனைச்சாவடி
    X
    சோதனைச்சாவடி

    ஆம்புலன்சுகளுக்கு அனுமதி மறுப்பு - தெலுங்கானா அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை

    அண்டை மாநில ஆம்புலன்சுகளுக்கு தடை விதித்த தெலுங்கானா மாநில அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி அரசு, ஆந்திர பிரதேசத்தில் இருந்து கொரோனா நோயாளிகளை சுமந்து கொண்டு செல்லும் ஆம்புலன்சுகள், வாகனங்கள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

    இதுதொடர்பாக, தெலுங்கானாவின் சூர்யபேட்டை நகர காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆந்திர பிரதேசத்தில் இருந்து கொரோனா நோயாளிகளை சுமந்து கொண்டு சிகிச்சைக்காக தெலுங்கானாவுக்கு வரக்கூடிய அனைத்து ஆம்புலன்சுகள் மற்றும் தனியார் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

    அப்படி வருபவர்கள், மருத்துவமனையிடம் இருந்து பெற்ற அனுமதி மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு மைய சுகாதார இயக்குனரின் அங்கீகரிக்கப்பட்ட பாஸ் ஆகியவற்றை உடன்  வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் இந்த இரண்டுக்கும் உரிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதன்பின்னரே அவர்கள் தெலுங்கானாவுக்கு வரவேண்டும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

    இதன் எதிரொலியாக, கரிகபாடு சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து வந்த பல ஆம்புலன்சுகள் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றன.

    கொரோனா வைரஸ்

    இதுபற்றி கட்வால் பகுதியில் பல மணிநேரம் சிக்கித்தவித்த பெண் ஒருவர் கூறும்பொழுது, ஆந்திர பிரதேசம்-தெலுங்கானா எல்லையில் அதிகாலை 4 மணிமுதல் காத்திருக்கிறேன்.

    எனது கணவருக்கு தேவையான ஆக்சிஜன் தீர்ந்தபொழுது, நிருபர்கள் எனக்கு உதவி செய்தனர்.  இதனால் கர்னூல் பகுதிக்குச் சென்று ஆக்சிஜனை நிரப்பிக் கொண்டு ஆம்புலன்சில் திரும்பி வந்துள்ளேன். இந்த ஆக்சிஜனும் 2 மணி நேரத்தில் தீர்ந்து விடும் என வேதனையுடன் கூறினார்.

    ஆந்திர பிரதேசம் அல்லது தெலுங்கானா என இரு அரசாங்கங்களிடம் இருந்தும் எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.

    இந்நிலையில், இதற்கு எதிராக தெலுங்கானா ஐகோர்ட்டில் ஆந்திர பிரதேச அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆம்புலன்சுகள் நுழைய மாநில எல்லையில் விதித்த தடை உத்தரவு பற்றிய வழக்கு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், அண்டை மாநிலங்களில் இருந்து சிகிச்சை பெற, மருத்துவமனைகளின் ஒப்புதலை முன்பே பெற்று வரும் ஆம்புலன்சுகளுக்கு மட்டுமே மாநிலத்திற்குள் நுழைய அனுமதி என்ற அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தது.

    ஆம்புலன்சுகளை தடுத்து நிறுத்த மாநிலத்திற்கு அதிகாரமில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவின்படி ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வை பாதுகாப்பதற்கு உரிமை உள்ளது என தெலுங்கானா ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×