search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஆளுநர் ஜெகதீப் தங்கார்
    X
    பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஆளுநர் ஜெகதீப் தங்கார்

    மேற்கு வங்காள தேர்தல் வன்முறை... அசாமில் தஞ்சமடைந்த மக்களுக்கு ஆறுதல் கூறிய ஆளுநர்

    மேற்கு வங்காளத்தில் காவல் நிலையங்களுக்குச் செல்லவே மாநில மக்கள் பயப்படுவதாக ஆளுநர் கூறி உள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் பாஜக மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுகின்றன.

    இந்நிலையில், தேர்தலுக்குப் பின்னர் நடந்த வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களையும், உயிருக்குப் பயந்து மாநிலத்தைவிட்டு வெளியேறி அசாமில் தஞ்சம் அடைந்த மக்களையும் நேரில் சந்தித்து பேச உள்ளதாக மேற்கு வங்காள ஆளுநர் ஜெகதீப் தங்கார் தெரிவித்தார். இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த எதிர்ப்பையும் மீறி, பாதிக்கப்பட்ட மக்களை ஆளுநர் ஜெகதீப் தங்கார் சந்தித்து பேசினார். இன்று அசாமின் அகோமணி பகுதியில் உள்ள ரன்பாக்லி முகாமில் தங்கியிருந்த மக்களை சந்தித்து அறுதல் கூறினார். அப்போது மக்கள் தங்களின் நிலையை எடுத்துக் கூறி வேதனை தெரிவித்தனர். கண்ணீர்விட்டு கதறி அழுத ஒருவருக்கு அளுநர் ஆறுதல் கூறி தேற்றினார்.

    ஆளுநர் ஜெகதீப் தங்கார்

    பின்னர் ஆளுநர் ஜெகதீப் தங்கார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    காவல் நிலையங்களுக்குச் செல்லவே மாநில மக்கள் பயப்படுகின்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பயப்படுகிறார்கள்.  அசாமிற்கு வந்த மக்களை திரும்பி வரும்படி கூறி உள்ளேன். முதல்வரிடம் நேர்மறையான அணுகுமுறையுடன் பேசுவேன். அவரிடம் அதிகாரம் உள்ளது. முதல்வர் மோதலை விட்டுவிட வேண்டும்.

    சிட்டால்குச்சியில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அவர்கள் அதை இனப்படுகொலை என்றும் கொடூரமான கொலை என்றும் அழைத்தனர். அவர் (முதல்வர்) பதவியேற்ற பிறகு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்ததுடன், எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்துள்ளார். ஒட்டுமொத்த மாநிலமும் பற்றி எரியும் போது, உங்களால் வேறு எதையும் பார்க்க முடியவில்லையா? என முதல்வரை கேட்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×