search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.கே.சிவக்குமார்
    X
    டி.கே.சிவக்குமார்

    ஊரடங்கு காலத்தில் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்: டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்

    கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதாக அரசு சொல்கிறது. ஆனால் இவர்கள் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் 24 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததற்கு அரசே பொறுப்பு என்று ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு என்பதை அரசு கூற வேண்டும்.

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார். ஆனால் அதன் பிறகு தடுப்பூசியை சரியான முறையில் வழங்கவில்லை. மத்திய அரசு எவ்வளவு தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது என்பது குறித்து தகவலை முதல்-மந்திரி வெளியிட வேண்டும்.

    மாநிலங்களுக்கு தடுப்பூசி வினியோகம் செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து கர்நாடக அரசு வலியுறுத்த வேண்டும். கர்நாடகத்தில் உள்ள 25 பா.ஜனதா எம்.பி.க்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பி இருக்கிறார்களா?. மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசுகள் சிறப்பாக செயல்படும் என்று எடியூரப்பா கூறினார்.

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதாக கூறிவிட்டு இப்போதை அதை நிறுத்திவிட்டனர். இந்த இரட்டை என்ஜின் அரசுகள் பழுதாகி நின்றுவிட்டது. கர்நாடகத்திற்கு 1,200 டன் ஆக்சிஜன் ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கர்நாடகத்தின் நலனை ஐகோர்ட்டு காப்பாற்றியுள்ளது.

    45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் ஏராளமானவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கவில்லை. சிலருக்கு 2-வது டோஸ் கிடைக்கவில்லை. தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு சரியான முறையில் மேற்கொள்ளவில்லை. விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. உரம் விலை உயர்ந்துவிட்டது. அதை குறைப்பதாக பா.ஜனதாவினர் கூறினார்கள். இதுவரை அவற்றின் விலை குறையவில்லை.

    இந்த ஊரடங்கு காலத்தில் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். உரம் விலையை குறைக்க வேண்டும். பூ, தக்காளி, காய்கறி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். உடற்பயிற்சி கூடம், சினிமா உள்ளிட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதாக அரசு சொல்கிறது. ஆனால் இவர்கள் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டனர்.

    வங்கி கடன் மீதான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தவணையை செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும். நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க மத்திய-மாநில அரசுகளே காரணம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    Next Story
    ×