search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சத்தீஸ்காரில் புதிய சட்டசபை கட்டுமான பணிகள் நிறுத்தம் - கொரோனா பரவலை தொடர்ந்து அதிரடி

    கொரோனாவால் மாநில அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எனவே அரசின் பல்வேறு திட்டப்பணிகளை மாநில காங்கிரஸ் அரசு ரத்து செய்துள்ளது. மேலும் பல கட்டுமான பணிகளை நிறுத்தியுள்ளது.
    ராய்ப்பூர்:

    கொரோனாவால் பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சத்தீஸ்காரில் புதிய சட்ட சபைக்கான கட்டுமான பணிகளை அரசு நிறுத்தியது.

    இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சத்தீஸ்காரும் ஒன்று. அங்கு சுமார் 1¼ லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவால் மாநில அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எனவே அரசின் பல்வேறு திட்டப்பணிகளை மாநில காங்கிரஸ் அரசு ரத்து செய்துள்ளது. மேலும் பல கட்டுமான பணிகளை நிறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதிய ராய்ப்பூரில் நடந்து வரும் புதிய கவர்னர் மாளிகை, சட்டசபை கட்டிடம், முதல்-மந்திரி இல்லம், மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கான வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் கட்டுமானப்பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளன.

    மேலும் புதிய ராய்ப்பூர் பகுதியில் நடந்து வரும் பெரிய பெரிய கட்டுமானப்பணிகள் அனைத்தும் முதல்-மந்திரி பூபேஷ் பாகேலின் அறிவுறுத்தலின் பேரில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    இந்த கட்டுமானப்பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவை பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் பிறப்பித்து உள்ளார்.

    இவை தவிர புதிய சட்டசபை கட்டிடத்துக்காக ஏற்கனவே விடப்பட்டிருந்த ரூ.245.16 கோடி மற்றும் ரூ.118 கோடிக்கான டெண்டர்கள் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.

    இவ்வாறு மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    புதிய ராய்ப்பூரில் நடந்து வரும் சட்டசபை கட்டிடம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் கட்டுமானப்பணிகளுக்கான பூமி பூஜை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 25-ந்தேதி போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த பணிகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தனது டுவிட்டர் தளத்தில், ‘நமது குடிமக்களே நமது முன்னுரிமை. புதிய சட்டசபை கட்டிடம், கவர்னர் மாளிகை, முதல்-மந்திரி இல்லம், மந்திரிகளுக்கான வீடுகள் போன்றவற்றை அமைப்பதற்காக கொரோனாவுக்கு முன்னரே அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தற்போதைய நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு மேற்படி கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன’ என்று கூறியிருந்தார்.

    கொரோனாவை கருத்தில் கொண்டு மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பூபேஷ் பாகேல், கடந்த நிதியாண்டைப்போல இந்த நிதியாண்டிலும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறைகளையும் கேட்டுக் கொண்டிருப்பதாக மாநில அரசு கூறியுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

    இதை சுட்டிக்காட்டியிருந்த சத்தீஸ்கார் மாநில பா.ஜனதாவினர், மத்திய அரசை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பிருந்தது. இந்த சூழலில் புதிய கட்டுமான பணிகளை மாநில அரசு ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×