search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜன் சிலிண்டர்கள்
    X
    ஆக்சிஜன் சிலிண்டர்கள்

    டெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்

    டெல்லியின் ஒதுக்கீட்டிலிருந்து உபரி ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு வழங்கலாம் என்று மத்திய அரசிடம் டெல்லி அரசு கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்தனர். 

    வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்யவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மே 17ம் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

    மணீஷ் சிசோடியா

    இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது:-

    டெல்லியில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை குறைந்து, மருத்துவமனை படுக்கைகள் காலியாகி வருகின்றன. நெருக்கடியான நேரத்தில் (15 நாட்களுக்கு முன்பு), எங்களுக்கு ஒரு நாளைக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. தற்போது ஆக்ஸிஜன் தேவை ஒரு நாளைக்கு 582 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது.

    எனவே, நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஒரு நாளைக்கு 582 மெட்ரிக் டன் ஆக்சிஜனைக் கொண்டு சமாளிக்க முடியும் என்றும், டெல்லியின் ஒதுக்கீட்டிலிருந்து உபரி ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு வழங்கலாம் என்றும் கூறியுள்ளோம். 

    டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், துயரத்தில் தவித்த டெல்லி மக்களுக்கு உதவி செய்த மத்திய அரசு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் புள்ளிவிவரங்களைவிட 21 சதவீதம் குறைவு ஆகும். கொரோனா பாசிட்டிவ் விகிதம் 14 சதவீதமாக குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×