search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகதீஷ் ஷெட்டர்
    X
    ஜெகதீஷ் ஷெட்டர்

    1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை: மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர்

    கொரோனா நோயாளிகளை காப்பாற்ற 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்திருப்பதாக தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் ஆக்சிஜன் தேவை, வினியோகம் குறித்து அதன் பொறுப்பாளரான தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேசும்போது கூறியதாவது:-

    கர்நாடகத்திற்கு இதுவரை சராசரியாக 1,015 டன் திரவ ஆக்சிஜன் வினியோகம் செயயப்பட்டுள்ளது. தற்போது வரை தேவைப்படும் அளவுக்கு ஆக்சிஜன் நமக்கு கிடைக்கிறது. ஆனால் நாளுக்கு நாள் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் வினியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைப்படும் அளவுக்கு ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். இது குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரிக்க வேண்டும். இவற்றில் எந்த குழப்பத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது.

    மத்திய மந்திரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த காரணத்தால் தற்போது 120 டன் திரவ ஆக்சிஜன் ரெயில் மூலம் கர்நாடகம் வந்துள்ளது. வரும் நாட்களில் கூடுதலாக ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. கர்நாடகத்தில் அவசர காலங்களில் பயன்படுத்த வசதியாக பாதுகாக்கப்பட்ட ஆக்சிஜன் கிடங்குகளை அமைப்பதில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    கர்நாடகத்திற்கு அதிக ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து இதுவரை 320 சிலிண்டர்கள், 400 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்துள்ளன. கர்நாடக அரசு 7 ஆயிரத்து 700 சிலிண்டர்கள், 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இவ்வாறு ஜெகதீஷ்ஷெட்டர் கூறினார்.

    கூட்டத்தில் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராஜ்குமார் கத்ரி, சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர், கனிமவளத்துறை முதன்மை செயலாளர் பங்கஜ்குமார் பான்டே, தொழில்துறை கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×