search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆக்சிஜன் வினியோகத்தில் குளறுபடி - 26 கொரோனா நோயாளிகள் பலி

    சமீபத்தில் கூட தமிழகத்தில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வினியோகம் தடைபட்டதால் 13 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தது, இங்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    பனாஜி:

    கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை விரட்டியடிப்பதற்காக நாடு முழு மூச்சுடன் போராடிக்கொண்டிருக்கிறது.

    கொரோனா பரவல் சங்கிலியை முறிப்பதற்காக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தொற்றில் சிக்குவோர், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், ஆக்சிஜன் வினியோக குளறுபடிகளால் இறப்பது மிகுந்த மன வலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    அந்த வகையில் சமீபத்தில்கூட தமிழகத்தில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வினியோகம் தடைபட்டதால் 13 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தது, இங்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கோப்புப்படம்


    இதுபற்றி விசாரணை நடத்திய அந்த மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், ஆக்சிஜன் செல்லும் குழாயில் ஏற்பட்ட பிரச்சினையால் 13 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

    இந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்கு முன்பாக சிறிய மாநிலமான கோவாவிலும் ஒரு துயரச்சம்பவம் நேற்று நடந்துள்ளது. இதுபற்றிய தகவல்கள் வெளியாகி வேதனையை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த மாநிலத்தின் தலைநகரான பனாஜியில் கோவா அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அங்கு ஆக்சிஜன் வினியோகத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். நேற்று அதிகாலை 2 மணி முதல் 6 மணிக்குள் கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். அரசு ஆஸ்பத்திரியில் 26 பேர் பலியான சம்பவம் அந்த மாநிலத்தை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இதுபற்றி மாநில சுகாதார மந்திரி விஷ்வஜித் ரானே கூறியதாவது:-

    கோவா அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று (நேற்று) அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரையில் கொரோனா நோயாளிகள் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இது உண்மைதான்.

    இந்த ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வினியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது உண்மைதான்.

    அதே நேரத்தில் இந்த 26 பேர் சாவின் பின்னணி குறித்து ஐகோர்ட்டு விசாரணை நடத்த வேண்டும். இதில் ஐகோர்ட்டு தலையிட்டு ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்க வேண்டும். இது பிரச்சினையை சரி செய்ய உதவும்.

    இந்த ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தின நிலவரப்படி 1,200 ஜம்போ ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை இருந்தது. ஆனால் 400 சிலிண்டர்கள் மட்டுமே சப்ளை செய்யப்பட்டன. கோவா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சையை மேற்பார்வையிட அமைக்கப்பட்டுள்ள 3 பேரைக்கொண்ட குழு, இங்குள்ள பிரச்சினைகள் குறித்த தனது கருத்துகளை முதல்-மந்திரிக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக முதல்-மந்திரி பிரமோத் சவந்த் (பா.ஜ.க.), சுய பாதுகாப்பு கவச உடைகள் அணிந்துகொண்டு வந்து கோவா அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டுகளை பார்வையிட்டார். அவர் நோயாளிகளையும், அவர்களது உறவினர்களையும் சந்தித்து பேசினார்.

    இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், “இங்குள்ள கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் கிடைப்பதில் பிரச்சினைகள் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும். மருத்துவ ஆக்சிஜனை சீராக வழங்குவதை உறுதி செய்வதற்கு வார்டு வாரியாக ஒரு வழிமுறை வகுக்கப்படும்” என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “மருத்துவ ஆக்சிஜனுக்கோ, சிலிண்டர்களுக்கோ தட்டுப்பாடு இல்லை என்றபோதும், சிலிண்டர்கள் சரியான நேரத்தில் உரிய இடங்களுக்கு போய்ச்சேருவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×