search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    ஆக்சிஜன், ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை: எடியூரப்பா

    கர்நாடகத்தில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. அத்துடன் கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிவேகமாக உயர்ந்்து வருகிறது. இதையடுத்து கர்நாடகத்தில் நேற்று முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

    இந்த நிலையில் மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் உள்ள அவரது காவேரி இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு இன்று (நேற்று) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பொதுவெளியில் தேவையின்றி நடமாடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுகக வேண்டும்.

    அவசர மருத்துவ படுக்கை தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு அந்த வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்து, தேவைக்கு ஏற்ப வினியோகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தனியார் மருத்துவமனைகளில் அரசு ஒதுக்கீட்டில் இருக்கும் படுக்கைகளை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    ஆக்சிஜன், ரெம்டெசிவிர், படுக்கை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தால் அதில் தொடர்பு உடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டளை மையங்கள் (வார் அலுவலகங்கள்) இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்.

    கர்நாடகத்தில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க வேண்டும். இந்த பணிகளை இப்போது இருந்தே தொடங்க வேண்டும்.

    கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள இப்போது இருந்தே தயாராக வேண்டும். இதற்கென்று ஒரு தனி செயல்படை அமைக்கப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வனத்துறை மந்திரி அரவிந்த் லிம்பாவளி, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×