search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லை
    X
    கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லை

    மும்பையில் 2-வது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட முடியாமல் மக்கள் ஏமாற்றம்

    மும்பையில் மருந்து கையிருப்பு இல்லாததால் முதல் டோஸ் போட்டு 42 நாட்கள் கடந்த பிறகும் பொதுமக்கள் 2-வது டோஸ் கோவாக்சின் போட முடியாமல் தவித்து வருகின்றனர்.
    மும்பை :

    நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மும்பையில் ஆரம்பத்தில் தடுப்பூசி போட பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. அதன்பிறகு தொற்று பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பொதுமக்கள் அதிகளவில் தடுப்பூசி போடத்தொடங்கினர்.

    பொதுமக்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 நிறுவனங்களின் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்தநிலையில் நகரில் கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று 2-வது நாளாக மும்பையில் எந்த மையங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி போடாதது மக்கள் இடையே ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    மும்பையில் தற்போது 175 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மருந்து கையிருப்பு இல்லாததால் ஒரு மையத்தில் கூட கோவேக்சின் தடுப்பூசி போடப்படவில்லை. இதன் காரணமாக முதல் டோஸ் போட்டு 42 நாட்கள் கடந்த பிறகும் பொதுமக்கள் 2-வது டோஸ் கோவாக்சின் போட முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் ருபேஷ் லிங்காயத் என்பவரின் டுவிட்டர் பதிவில், "எனது தந்தை முதல் டோஸ் கோவாக்சின் போட்டுக்கொண்டார். தற்போது 2-வது டோஸ் கோவாக்சின் போடுவது இயலாத காரியம் ஆகி உள்ளது. அவர் முதல் டோஸ் போட்டு 43 நாட்கள் ஆகிவிட்டது. அவருக்கு வயது 63. தயவு செய்து உதவி செய்யுங்கள்" என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல பலரும் மாநகராட்சி நிர்வாகம் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
    Next Story
    ×