search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹிமந்தா பிஸ்வா சர்மா
    X
    ஹிமந்தா பிஸ்வா சர்மா

    சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது... அசாமின் அடுத்த முதல்வரை அறிவித்தது பாஜக

    முதல்வராக இருந்த சர்பானந்த சோனோவால் மற்றும் இந்த தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோருக்கிடையே கடும் போட்டி இருந்தது.
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி 50 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. ஆனால், முதல்வர் யார்? என்பதில் சஸ்பென்ஸ் நீடித்தது.

    ஏற்கனவே முதல்வராக இருந்த சர்பானந்த சோனோவால், இந்த தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோருக்கிடையே கடும் போட்டி இருந்தது.

    பாஜக சட்டமன்ற தலைவர் பெயரை அறிவித்த மேலிட பார்வையாளர்

    இந்நிலையில், பாஜக சட்டமன்ற தலைவரை (முதல்வர்) தேர்வு செய்வதற்காக மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர், பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில், இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஹிமந்தா பிஸ்வா சர்மா (வயது 52) சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    அசாமின் அடுத்த முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக பாஜக அறிவித்தது. இதனால் ஒரு வாரமாக நீடித்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. இதையடுத்து எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன், ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் அசைக்க முடியாத தலைவராக விளங்கிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2015ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவரது வருகையால் அசாமில் பாஜக வலுவடைந்தது. 2016 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. 

    அதேபோல் இந்த தேர்தலிலும் அவரது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்ததால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
    Next Story
    ×