search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீரமைக்க தேசிய பணிக்குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்டு

    கொரோனா மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீரமைக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 6-ம் தேதி விசாரித்தது. அது தொடர்பான உத்தரவை நேற்று வெளியிட்டது.

    அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

    கொரோனா மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீரமைக்கவும், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யவும் மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை அமைக்கிறோம்.

    இந்த குழுவில் மேற்கு வங்காள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பவதோஷ் பிஸ்வாஸ், டெல்லி சர் கங்காராம் ஆஸ்பத்திரியின் தலைவர் தேவேந்தர் சிங் ராணா, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் ககன்தீப் கங் மற்றும் அதன் இயக்குனர் ஜே.வி.பீட்டர், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    ஆக்சிஜன் சிலிண்டர்

    ஆக்சிஜன் ஒதுக்கீட்டைச் சீரமைக்கவும், அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யவும் மத்திய, மாநில அரசுகளுக்கு தரவுகளையும், பரிந்துரைகளையும் தந்து இந்த தேசிய பணிக்குழு உதவும்.எதிர்காலத்தில் தேவைப்படும் ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் ஆகியவற்றை அறிவியல்பூர்வமாக உறுதிசெய்ய இந்த பணிக்குழு உதவும்.கொரோனாவை எதிர்கொள்ள தற்போதும், எதிர்காலத்திலும் தேவைப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு இப்பணிக்குழு உதவும்.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அறிவியல்பூர்வமாக முறைப்படுத்த செயல்முறைத் திட்டத்துக்கான பரிந்துரைகளை தேசிய பணிக்குழு அளிக்கும். கொரோனா தாக்கத்தைப் பொறுத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் ஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்வதற்கான பரிந்துரைகளை தேசிய பணிக்குழு அளிக்கும்.

    எதிர்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுக்களைச் சமாளிக்கவும், தற்போது கொரோனாவை எதிர்கொள்ளவும் தேவையான முன்னேற்பாடுகளுக்கான திட்டங்களை தேசிய பணிக்குழு வகுத்து அளிக்கும். கொரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் பயிற்சி பெற்ற டாக்டர்கள், நர்சுகள், துணை மருத்துவ ஊழியர்கள் ஆகியோரை அதிகப்படுத்துவது, அவர்களுக்கான ஊதியம் தொடர்பான பரிந்துரைகளையும் தேசிய பணிக்குழு அளிக்கும் என
    தெரிவிக்கப்பட்டுள்ளது
    Next Story
    ×