search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்புலன்ஸ்
    X
    ஆம்புலன்ஸ்

    30 ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் சிகிச்சை அளிக்காததால் ஆம்புலன்சிலேயே உயிரை விட்ட மூதாட்டி

    மைசூருவில் கடந்த 3 நாட்களாக 30 ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் படுக்கை கிடைக்காததால் ஆம்புலன்சில் மகன் கண் எதிரில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
    மைசூரு :

    கர்நாடகத்தில் கொரோனா அரக்கன் தனது 2-வது அலையை தொடுத்து உள்ளான். தினமும் கொரோனாவுக்கு பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டு செல்கிறது.

    இதனால் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்கள் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுபோல மற்ற நோய்களால் பாதிக்கப்படுவர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை கிடைக்காமலும், படுக்கை கிடைக்காமலும் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்று மைசூருவில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    மைசூரு டவுன் ஆலனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரம்மா(வயது 75). இவர் வயோதிகம் காரணமாக கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுந்தரம்மா கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார்.

    சுந்தரம்மாவை அவரது மகன் நிகில் மீட்டு ஆம்புலன்சில் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சுந்தரம்மாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் படுக்கை இல்லை என்று கூறி சுந்தரம்மாவுக்கு சிகிச்சை அளிக்க அந்த தனியார் மருத்துவமனை மறுத்து விட்டது.

    இதையடுத்து கடந்த 3 நாட்களாக சுந்தரம்மாவை மைசூரு டவுனில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு நிகில் அழைத்து சென்றார். ஆனால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை, வெண்டிலேட்டர் வசதி இல்லை என்று காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலையில் ஆம்புலன்சில் வைத்து நிகில் கண்முன்னே சுந்தரம்மா இறந்தார். தனது கண்முன்னே தாய் இறந்ததை பார்த்து நிகில் கதறி அழுதார். பின்னர் அவரது உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதிசடங்கு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுந்தரம்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
    Next Story
    ×