search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகில் கோகோய்
    X
    அகில் கோகோய்

    சிறையில் இருந்தபடி தேர்தலில் வென்று வரலாறு படைத்த அகில் கோகோய்

    ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியின் நிறுவனரான அகில், சிறையில் இருந்தபடியே அசாம் சட்டசபை தேர்தலில் சிப்சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
    கவுகாத்தி :

    அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பாளர், ஊழல் எதிர்ப்பு, தகவல் அறியும் உரிமைச்சட்ட போராளியாக அறியப்பட்டிருப்பவர், அகில் கோகோய். 46 வயதாகும் இவர், கடந்த 2019-ம் ஆண்டு தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியின் நிறுவனரான அகில், சிறையில் இருந்தபடியே அசாம் சட்டசபை தேர்தலில் சிப்சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

    ஒருமுறைகூட வெளியில் வந்து பிரசாரம் செய்ய வாய்ப்பில்லாத அகில், சிறையில் இருந்தபடியே பல திறந்த மடல்களை தொகுதி மக்களுக்குக்கு எழுதினார். அதில், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டார்.

    மகன் அகிலுக்காக அவரது 85 வயதான தாய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரபல சமூக சேவகர் மேதா பட்கர், சந்தீப் பாண்டே போன்றோரும் அசாமுக்கு பறந்து வந்து அகிலின் தாயாருடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர். ராய்ஜோர் தள் கட்சியின் இளைஞர் படையும் தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்தது.

    இவை எல்லாவற்றின் கூட்டுப்பலனாக, 57 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார், அகில். இவருக்கும், 2-வது இடம் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் சுரபி ராஜ்கோன்வாரிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 11 ஆயிரத்து 875.

    இந்த வெற்றியின் மூலம், அசாமில் சிறையில் இருந்தபடி வென்ற முதல் நபர், தேசிய அளவில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு பிறகு 2-வது நபர் என்று வரலாற்றில் தனது பெயரை பதித்திருக்கிறார், அகில் கோகோய்.
    Next Story
    ×