search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    தவறை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்... தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

    நீதிபதிகள் கடுமையான வார்த்தைகளை கூறுகிறார்கள் என்றால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா தடுப்பு விதிமுறைகள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என கூறினர். மேலும், தேர்தல் நேரத்தில் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் தவறில்லை என்றும் கடுமையாக குற்றம்சாட்டினர்.

    தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட் கூறிய இந்த கடுமையான கருத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு செய்தது. கொரோனா தொற்றுநோயின் கொடிய இரண்டாவது அலைக்கு மத்தியில் வாக்கெடுப்புகளை நடத்தியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கருத்து, தேர்தல் ஆணையத்தை இழிவுபடுத்தும் கருத்துக்கள் என்று தேர்தல் ஆணையம் தனது மனுவில் கூறியிருந்தது.

    தேர்தல் ஆணையம்

    மேலும் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்படும் கருத்துக்களை வெளியிடுவதற்கு ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

    இந்த மனு, நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல், வாய்ப்பு தராமல் சென்னை உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உள்நோக்கத்துடன் உயர்நீதிமன்றம் கருத்து கூறவில்லை, கரத்துக்களை சரியான முறையில் எடுத்துகொள்ளுங்கள்’ என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.

    ‘தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவே நீதிமன்றங்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. நீதிபதிகள் கடுமையான வார்த்தைகளை கூறுகிறார்கள் என்றால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால், அந்த தவறை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். நீதிமன்றத்தில் நடப்பதை செய்தியாக்கும்போது நீதிபதிகளை மேலும் கண்ணியமாக செயல்படவைக்கிறது’ என நீதிபதிகள் கூறினர்.
    Next Story
    ×