search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ உபகரணங்கள்
    X
    மருத்துவ உபகரணங்கள்

    அமெரிக்காவில் இருந்து 1.25 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் விமானம் மூலம் இந்தியா வருகை

    இன்று 4ம் கட்டமாக கொரோனா நிவாரண பொருட்கள் விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பல உலக நாடுகள் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு சர்வதேச நாடுகள், எல்லைகளைக் கடந்து இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளன.

    மருத்துவ உபகரணங்கள்


    அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதாக உறுதியளித்தார். அமெரிக்காவில் கொரோனா பேரிடரின் தொடக்க காலத்தில் இந்தியா உதவி செய்தது போல, இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும் என ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இதன்படி ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் 3 கட்டங்களாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று 4ம் கட்டமாக கொரோனா நிவாரண பொருட்கள் விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த விமானத்தில் 1,25,000 ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளதாகவும், மேலும் பல மருத்துவ உபகரணங்கள் அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×