search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெளிநாடுகளில் இருந்து 7 இந்திய கடற்படை கப்பல்களில் ஆக்சிஜன் டாங்குகள் வருகிறது

    நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை நோக்கி இந்திய கடற்படை தனது செயல்பாட்டு உறுதியை உயர்த்தி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் குவிவதால் நிரம்பி வழிகின்றன.

    இதனால் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பலருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகின்றன. இவைகள் விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய கடற்படையும் இணைந்து இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து மருத்துவ ஆக்சிஜன்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியில் கடற்படையின் 7 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    ஐ.என்.எஸ். கொல்கத்தா, கொச்சி, தல்வார், தபார், திரிகண்ட், ஜலாஷ்வா மற்றும் ஐராவத் ஆகிய கப்பல்கள், திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர அனுப்பப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கடற்படை கமாண்டர் விவேக் மத்வால் கூறியதாவது:-

    நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை நோக்கி இந்திய கடற்படை தனது செயல்பாட்டு உறுதியை உயர்த்தி உள்ளது. சமுத்திர சேது -2 ஆபரேசனுக்காக 7 இந்திய கடற்படை கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    மேலும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப பல கப்பல்களை இணைக்க கடற்படை போதுமான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்துக்கு மேலும் தேவைப்படும் போது அதிகமான கப்பல்கள் அனுப்பப்படும்.

    ஐ.என்.எஸ். கொல்கத்தா மற்றும் ஐ.என்.எஸ். தல்வார் ஆகிய கப்பல்கள் பாரசீக வளைகுடா கடல் பகுதியில் இருந்து உடனடியாக மனாமா மற்றும் பக்ரைன் துறை முகங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த கப்பல்கள் கடந்த 30-ந் தேதி சென்றன.

    ஐ.என்.எஸ். தல்வார் கப்பல் 40 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு வருகிறது. ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பல் தோகாவுக்கு சென்று மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டும், குவைத்துக்கு சென்று திரவ ஆக்சிஜன் டேங்குகளையும் கொண்டு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×