search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்
    X
    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம்- 6 மாநிலங்களில் தொடங்கியது

    மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஒரிசா ஆகிய 6 மாநிலங்கள் இன்று தடுப்பூசி திட்டத்தை திட்டமிட்டப்படி தொடங்கியுள்ளன.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. முதலாவதாக சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    அதன் பிறகு பிப்ரவரி 2-ந் தேதி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மார்ச் 1-ந் தேதி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    ஏப்ரல் 1-ந் தேதி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. இதன்படி தற்போதுவரை 15 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

    மத்திய அரசு

    இன்று முதல் (மே 1-ந் தேதி) 18 வயதில் இருந்து 44 வயதுவரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசே இலவசமாக கொள்முதல் செய்து வழங்கியது. ஆனால் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு போடப்படும் தடுப்பூசியை மாநில அரசுகளே கொள்முதல் செய்து போட்டுக்கொள்ள வேண்டும். அல்லது தனியார் நிறுவனங்கள் தடுப்பூசியை போடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் மருந்தை உற்பத்தி செய்யும் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தங்களால் தற்போது போதிய மருந்துகளை சப்ளை செய்ய முடியாது என்று கூறிவிட்டன.

    பல மாநிலங்களும் மருந்துகளை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து இருந்தன. ஆனால் உரிய நேரத்தில் வராததால் திட்டத்தை இன்று தொடங்க முடியவில்லை.

    அதே நேரத்தில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஒரிசா ஆகிய 6 மாநிலங்கள் இன்று தடுப்பூசி திட்டத்தை திட்டமிட்டப்படி தொடங்கியுள்ளன.

    ஆனால் குறைந்த இடங்களில் மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரத்திற்கு 3 லட்சம் டோஸ் மருந்துகள் நேற்று வந்தன. இதை வைத்து புனே, மும்பை, தானே மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளன.

    உத்தரப்பிரதேசத்தில் 75 மாவட்டங்கள் உள்ளன. அதில் 7 மாவட்டங்களில் மட்டும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது. ராஜஸ்தானில் மொத்த உள்ள 33 மாவட்டங்களில் 3 மாவட்டங்கள் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது.

    குஜராத்தில் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    ஒரிசா, சத்தீஸ்கரில் சில மாவட்டங்களில் மட்டும் இன்று தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×