search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்
    X
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி- சுப்ரீம் கோர்ட்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்றும் ஆலைக்கு தேவையான மின்சார வசதி உள்ளிட்டவைகளை தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இலவசமாக ஆக்சிஜனை தயாரித்து வழங்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு முன்வரவேண்டும், இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என கூறியது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என்றும், வேறு எந்த பணிகளுக்கும் அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பிரமாண பத்திரமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

    மேலும் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும், இந்த குழுவில் உள்ளூரை சேர்ந்த 2 பேர் இடம்பெறலாம் எனவும் கூறினர்.

    சுப்ரீம் கோர்ட்

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வருகிற ஜூலை 31-ந்தேதி வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொள்ளலாம். அதன் பின்னர் உற்பத்தி செய்வது தொடர்பாக அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மின்சார வசதி உள்ளிட்டவைகளை தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×