search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் கமிஷன்
    X
    தேர்தல் கமிஷன்

    கொரோனா விதிமுறைகளை அமல்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - தேர்தல் கமிஷன் விளக்கம்

    கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்று தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்று தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

    கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை நேற்று முன்தினம் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த தேர்தல் கமிஷன் தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்தது.

    சென்னை ஐகோர்ட்


    இந்தநிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும்வகையில் தேர்தல் கமிஷன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு கூறியதாக சில ஊடகங்களில் வெளியான கருத்துகள், இறுதியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இடம்பெறவில்லை.

    இருப்பினும், நேர்மையான, நியாயமான, பாதுகாப்பான தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கைகளை 30-ந்தேதி நடக்கும் அடுத்தகட்ட விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டில் தெரிவிப்போம். ஐகோர்ட்டின் அனைத்து உத்தரவுகளுக்கும் கட்டுப்படுவோம்.

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உரிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியது மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் பொறுப்பாகும். பேரிடர் மேலாண்மை சட்டப்படி, அவர்கள் இதற்காக நடவடிக்கை எடுக்கலாம்.

    ஊரடங்கு, பொது முடக்கம் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம். எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களின் அதிகாரத்தை தேர்தல் கமிஷன் கைப்பற்றியது இல்லை.

    தேர்தல் பிரசாரத்தின்போது, மக்கள் பெரிய அளவில் கூடுவதை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தடுக்கவில்லை.

    நாங்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்தபோது கூட கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தேர்தல் நடைபெறும் என்று கூறினோம்.

    தேர்தல் பிரசாரம் நடந்தபோது, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றை கண்டிப்பாக அமல்படுத்துமாறும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம்.

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 4-ந்தேதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. நல்லவேளையாக அப்போது கொரோனா இரண்டாவது அலை பெரிதாக தலைகாட்டவில்லை. 6-ந்தேதி தேர்தலின்போது, கொரோனா கட்டுப்பாடுகளுடன் கணிசமான சதவீதத்தில் மக்கள் வாக்களித்தனர்.

    அதன்பிறகு ஏப்ரல் 20-ந்தேதியில் இருந்துதான் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. அதாவது, தேர்தல் பிரசாரம் முடிவடைந்து 16 நாட்களுக்கு பிறகுதான் ஊரடங்கை கொண்டு வந்தது.

    இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
    Next Story
    ×