search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    சென்னை ஐகோர்ட்டு கருத்துக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு - மத்திய படைகளை திரும்பப்பெறவும் வலியுறுத்தல்

    கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை ஐகோர்ட்டின் கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.
    கொல்கத்தா:

    கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    குறிப்பாக பெருந்தொற்று பரவிய நிலையில், அரசியல் கட்சிகள் பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் அனுமதித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கொரோனா 2-வது அலை பரவலுக்கு தேர்தல் கமிஷனே காரணம் என்றும், மிகவும் பொறுப்பற்ற நிறுவனம், தேர்தல் கமிஷன் எனவும் சாடினர்.

    சென்னை ஐகோர்ட்


    சென்னை ஐகோர்ட்டின் இந்த கருத்தை மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வரவேற்று உள்ளார். வடக்கு கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவை நான் வரவேற்கிறேன். தேர்தல் கமிஷன் தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடத்திய முறை குறித்து, வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்ததும் தேர்தல் கமிஷனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். மாநிலத்தில் தொற்று அதிகரித்து இருக்கும் நிலையிலும் கடைசி சில கட்ட தேர்தல்களை இணைத்து நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்போதைய கொடூரமான சூழலுக்கு பிரதமர் மோடியும், தேர்தல் கமிஷனுமே காரணம். சுடுகாடுகளில் கொத்துக்கொத்தாக பிணங்கள் எரிக்கப்பட்டு வரும் நிலையில், மோடியோ ‘மன் கீ பாத்’ உரைகளை வழங்குவதில்தான் தீவிரமாக இருக்கிறார். அந்தவகையில் மக்களின் பாதுகாப்பு குறித்து உணர்வற்ற நிலையில் அவர் இருக்கிறார். கொரோனா பாதித்த மாநிலங்களில் முகாமிட்டுள்ள 2 லட்சம் மத்தியப்படைகளை தயவுசெய்து திரும்பப்பெறுங்கள். பள்ளி-கல்லூரிகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் கொரோனா மேலாண்மை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கின்றனர். அவர்களில் 75 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் இருக்கலாம். தயவுசெய்து மேற்கு வங்காளத்தின் கடைசி கட்ட தேர்தலில் மத்தியப்படைகளை வாபஸ் பெறுங்கள்.

    நான் பிரசாரம் செய்வதை தடுப்பதற்காகவும், பா.ஜனதா தலைவர்கள் அதிகபட்ச பிரசாரங்களை மேற்கொள்வதற்காகவும் வடக்கு வங்காளத்தில் வெவ்வேறு நாட்களில் வாக்குப்பதிவை வைத்துள்ளனர். இப்படி அருகில் உள்ள பகுதிகளில் வெவ்வேறு முறை நடத்தப்பட்ட தேர்தலால் 9 முறை நான் வடக்கு வங்காளத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனாலும் எனது காயமடைந்த ஒரு காலையும் கொண்டு 50 நாட்களாக பிரசாரம் மேற்கொண்டேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
    Next Story
    ×