search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மத்திய பிரதேசத்தில் ருசிகரம் : ஆக்சிஜன் வாங்குவதற்காக ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கிய விவசாயி

    மத்திய பிரதேச மாநில விவசாயி ஒருவர், தனது மகளின் திருமண செலவுக்காக சேமித்த ரூ.2 லட்சம் பணத்தை, கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்காக நன்கொடையாக வழங்கி உள்ளார்.
    போபால்:

    நாடுமுழுவதும் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் போன்றவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் நோயாளிகளும், உறவினர்களும் அல்லாடும் நிலையை பார்க்க முடிகிறது.

    இந்தநிலையில் மத்திய பிரதேச மாநில விவசாயி ஒருவர், தனது மகளின் திருமண செலவுக்காக சேமித்த ரூ.2 லட்சம் பணத்தை, கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்காக நன்கொடையாக வழங்கி உள்ளார். அவரது பெயர், சம்பாலால் குர்ஜார்.

    நீமுச் மாவட்டம் குவால் தேவியன் கிராமத்தில் வசிக்கும் அவர், மாவட்ட கலெக்டர் மயங்க் அகர்வாலிடம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதில் தனது தாலுகா மருத்துவமனைக்கும் மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கும் தலா ஒரு மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக்கொள்ள கேட்டுக்கொண்டார். தனது மகளின் திருமணத்தை பலரும் போற்றும்படி நடத்த வேண்டும் என்று விரும்பி சிறுக சிறுக பணம் சேமித்து வந்தாராம் குர்ஜார். அவரது மகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.

    நாடு முழுவதும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு போராடி வருவது குர்ஜாரின் சிந்தனையில் மாற்றத்தை வரவழைத்தது. திருமண ஆடம்பர செலவை குறைத்து கொரோனா நோயாளிகளின் உயிர்காக்க உதவும் வகையில் பணத்தை செலவிட வேண்டும் என்று முடிவு செய்தாராம். அதன்படி மகளின் திருமண விழா நினைவாக, ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க நன்கொடை வழங்கியதாக குர்ஜார் கூறினார்.

    விவசாயியின் நன்கொடையை மாவட்ட கலெக்டர் மற்றும் பலரும் பாராட்டி வருகிறார்கள்
    Next Story
    ×