search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    கொரோனா பற்றிய உண்மைகள் மறைப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    இந்தியாவில் கொரோனா பற்றிய உண்மைகள் மறைக்கப்படுவதாகவும், இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வெறியாட்டம் தொடர்கதையாய் நீளுகிறது. தினமும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த தொற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை, நாட்டையே உலுக்கி உள்ளதாக பிரதமர் மோடி நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார். அந்தளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

    இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை மறுக்கப்படுகிறது. இறப்புகள் குறைத்து கூறப்படுகின்றன. இந்திய அரசுதான் இவை எல்லாவற்றையும் செய்கிறது. அதுவும் அவரது (மோடி) மாயையான தோற்றத்தை காப்பாற்றுவதற்காகத்தான்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இத்துடன், ‘கொரோனா வைரஸ் இந்தியாவை அழிக்கிறது, உண்மையான பலி எண்ணிக்கை குறைத்து கூறப்படுகிறது’ என்ற அர்த்தம் தொனிக்கிற தலைப்பின்கீழ் அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் நேற்று வெளியான முதல் பக்க செய்தியை கத்தரித்து வெளியிட்டுள்ளார்.

    ரன்தீப் சுர்ஜிவாலா


    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, டெல்லியில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரும் கொரோனா தொற்று பாதிப்பு பற்றிய தரவுகள் மறைக்கப்படுவதாகவும், மொத்த நோய்த் தொற்று மற்றும் இறப்புகள் பற்றிய எண்ணிக்கையை பகிர்ந்து கொள்ளாதது நாட்டுக்கு அவமானம் எனவும், எவ்வளவு மோசமான தரவுகள் என்றாலும், அது விழிப்புணர்வையும், எச்சரிக்கையையும் ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

    “தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ரூ.1.11 லட்சம் கோடி லாபம் சம்பாதிக்க மோடி அரசு அனுமதித்துள்ளது. இத்தகைய வெட்கக்கேடான தடுப்பூசி லாபத்தை எவ்வாறு அனுமதிப்பது? பெருந்தொற்று காலத்தில் இந்த லாபத்துக்கு மோடி அரசு ஏன் உடந்தையாக இருக்கிறது? இதற்கு பிரதமர் மோடி கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்” எனவும் ரன்தீப் சுர்ஜிவாலா வலியுறுத்தினார்.
    Next Story
    ×